Friday, December 18, 2009

அன் அவைலபிள்............




கடல், யானை, ரயில் - எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வியங்களாக நாம் குறிப்பிடுவது இந்த மூன்றையும் தான். முன் இரண்டையும் விட பாரதத்தில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வியலோடு கலந்து இருக்கிறது ரயில். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வியங்களில் ரயில்வே துறையும் ஒன்று.பல உலக நாடுகளின் அளவுக்கு அதனுடைய வளர்ச்சி இல்லாமல் இருந்தாலும், 1.4 மில்லியன் ஊழியர்களை கொண்டது இந்திய ரயில்வே துறை. இங்கே சுமார் 20 மில்லியன் மக்கள் ரெயிலை தினமும் போக்குவரத்திற்காக பயன் படுத்துகிறார்கள்.

கடந்த நவம்பர் 11 முதல் 20 வரை மட்டும் ரயில்வே துறையின் வருவாய் சுமார் 2100 கோடி ரூபாய். சில மாதங்களுக்கு முன் இந்த பணம் கொழிக்கும் துறையை கைப்பற்ற இரு மாநில கட்சிகள் குடுமி பிடி சண்டை போட்டது நாடறிந்த விஷயம்.

எந்த ஒரு துறையும் மாறி வரும் தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்ப ஈடு கொடுக்க முடிந்தால் மட்டுமே அசுரத்தனமான வளர்ச்சியை பெற முடியும். உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டின் தேவைக்கு ஏற்ப ரயில்கள் இருகிறனவா என கேள்வி எழுப்பினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதன் தரம் பயணிகளின் முகத்தை சுளிக்க வைப்பதாகவே உள்ளது. கேண்டீனில் இருந்து கழிவறை வரை ரயில்வே துறையுனரின் சேவை குறைபாடுகள் அப்பட்டமாய் தெரிகிறது.

கேரளாவில் பணி புரியும் குடும்ப நண்பர் ஒருவர் என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இரண்டு நாட்களில் திரும்பி செல்ல வேண்டி இருந்ததால், ஆன்லைனில் தக்கால் டிக்கெட் ஒன்றை முன் பதிவு செய்ய சொன்னார். எளிதான காரியம் தானே என காலையிலேயே ரயில்வேயின் ஆன்லைன் புக்கிங் தளமான http://www.irctc.co.in இல் லாகின் செய்து விட்டு 8 மணி ஆகட்டும் என காத்திருந்தேன்.

அதுவரை ஒழுங்காய் வேலை செய்து வந்த இணையதளம் 8:00 மணி ஆனதும் முடக்கப்பட்டது. சுமார் 100 முறை திறந்து, மூடியும் வெவ்வேறு ப்ரௌசெர்களை உபயோகித்தும் ம்ம்... ஹும். 'சர்விஸ் அன் அவைலபிள்' என்ற செய்தி மட்டும் ஒரே அடியாய் மின்னி கொண்டு இருந்தது.


நீண்ட முயற்சிக்கு பின் சுமார் 8:30மணிக்கு இணையதளத்தில் உட் புக முடிந்தது. எல்லா விவரங்களையும் கொடுத்து ரயில் முன் பதிவு நிலவரத்தை பார்த்த போது அதிர்ந்து விட்டேன். ஆம் எல்லா இருகைகளும் முன் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து அந்த ரயிலில் முன் பதிவு செய்ய முடியாத படி தடை செய்யப்பட்டு இருந்தது.

மிகுந்த குழப்பத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன் என்று தான் சொல்ல வேண்டும். பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி மட்டும் என்னையே சுற்றி சுற்றி வந்தது... "என்னை போல் தானே மற்றவர்களுக்கும் 'சர்விஸ் அன் அவைலபிள்' என்ற செய்தி வந்திருக்கும், அப்படி இருக்கும் போது எப்படி அரை மணி நேரத்தில் ரயிலின் அத்தனை இருக்கைகளும், முன் பதிவு செய்யப்பட்டிருக்கும்". ஆனால் இந்த விபரங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ள ???.. ம்ம்.. ஹூம்...பண்டிகை நேரம் ஆனதால் கேரளா செல்லும் அனைத்து பேருந்து இருக்கைகளும் முன் பதிவு செய்யப்பட்டு விட்டது. இனி கேரளா செல்ல வேண்டுமானால் ரயிலில் முன்பதிவு செய்யாமல் தான் செல்ல வேண்டும் என முடிவு எடுத்து இரண்டு நாட்கள் காத்திருந்தோம்.

நண்பர் கிளம்பும் அன்று வெகு சீக்கிரமாகவே ரயில்வே நிலையம் சென்று, முன் பதிவு செய்யாத பயண சீட்டு வாங்கி விட்டு ரயில் நடை மேடைக்கு வரும் வரை காத்திருந்தோம். எதோச்சையாய் என் கல்லூரி தோழன் ஒருவன் வர, அவனும் என் நண்பர் செல்லும் அதே ரயிலை பிடிக்க தான் வந்திருக்கிறார் என தெரிந்தது. ரயில் டிக்கெட்டை எப்படி முன் பதிவு செய்ய முடிந்தது என அப்பாவித்தனமாகவும், ஆச்சரியத்துடனும் கேட்டேன். அவன் ஒரு மென் சிரிப்பை உதிர்த்து விட்டு சொன்னான் ' தான் எஜன்ட் வழியாக டிக்கெட் முன் பதிவு செய்ததாகவும், எப்போதும் அவ்வாறே செய்வதாகவும் அதனால் தான் தன்னுடைய பயணங்கள் எப்போதுமே தடங்கல் இல்லாமல் செல்வதாகவும் கூறினான். அவனுடைய பயண சீட்டை வாங்கி பார்த்தேன் உண்மை தான், ஏறக்குறைய நாங்கள் முன் பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரம் அவனுடைய பயண சீட்டு முன் பதிவு செய்ய பட்டிருந்தது....ரயில் கட்டணத்தை விட ஏறக்குறைய 150 ரூபாய் அதிகமாக கொடுத்திருக்கிறான்.

பெரும் கோபமும் வருத்தமும் கொண்டேன். முன்பதிவு என்பது இரு பிரிவினருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் ஏஜண்டுகள் எனப்படும் தனி முதலாளிகள் வளர மற்ற சாமானியர்கள் சுரண்டப்படுவது தான் வேதனை. இப்படி முதலாளித்துவத்தின் அடிவருடியாய் இருக்கும் நிலையை களைய அரசாங்கம் என்ன செய்ய போகிறது என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

Thursday, November 12, 2009

சொந்த செலவில் சூனியம் - கடன் அட்டை உபயோகிப்போரின் அவல நிலை - I


சொந்த செலவில் சூனியம் என்பது கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை வைத்திருப்பவர்களையே குறிக்கிறது என கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம்.

மாதத்திற்கு ஒரு முறையாவது ஏதேனும் வெகுஜன வார இதழ்களிலோ தினசரி நாளிதழ்களிலோ கிரெடிட் கார்டுகளினால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும் அதனை உபயோக படுத்துவோரின் எண்ணிக்கையோ, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோ குறைந்ததாகவே இல்லை.

ஒரு வருடத்துக்கு முன்பு வரை கையெழுத்து மட்டும் போட்டால் போதும் வீடு தேடி இலவசமாக கிரெடிட் கார்டு வரும் என்ற நிலை இருந்தது .இன்னும் சில நிறுவனங்கள் இலவசமாக கிரெடிட் கார்டை கொடுத்து,அதற்கும் இலவசமாக சில பொருட்களையும் வழங்கின.

பொருளாதார மந்த நிலைக்கு பின் பெருவாரியான கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கி வந்த சலுகைகளை நிறுத்தி கொண்டன. சில நிறுவனங்கள் கிரெடிட் கார்டு சேவையையே கை விட்டன.

இலவசமாய் கிடைக்கிறது என்ற மன ஓட்டத்தில் வரம்பு மீறி செலவினை செய்து கடனாளிகளாகி பலர் பணம் கட்ட முடியாமல் ஓடி விட, சரியாக பணம் கட்டுபவர்களின் தலையில் மிளகாய் அரைத்து கொண்டு இருக்கின்றன சில நிறுவனங்கள்.

என் அலுவலக நண்பர் ஒருவரும் இந்த நிறுவனங்களில் தில்லு முல்லுவில் சிக்கி மனம் நொந்து போனார் என்றே சொல்ல வேண்டும்.

" அநியாயத்துக்கு நல்லவன்பா " என தாராளமாய் அவரை நோக்கி சுட்டி காட்டலாம். பணப்பை( பர்ஸ்) நிறைய கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பார். ஏன் எப்படி வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் 'இந்த கிரெடிட் கார்டுகளை வாங்கி கொள்வதில் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவது இல்லை ,ஆனால் அதை விற்பனை செய்யும் இளைஞனுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்' என்று பதில் வரும்.மிக மிக அவசர தேவை என்றால் மட்டும் கிரெடிட் கார்டு களை உபயோக படுத்துவார்.

பத்து நாள் விடுப்பில் வெளியூர் செல்ல இருந்ததால் கிரெடிட் கார்டு க்கு செலுத்த வேண்டிய தொகையை கடைசி தேதிக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பாகவே காசோலையாக(Cheque) அருகில் இருந்த வங்கியின் தானியங்கி பண இயந்திரத்தின்(ATM) அருகில் இருக்கும் பெட்டிக்குள் இட்டு சென்றார். விடுப்பு முடிந்து வந்து தனது வங்கி இருப்பை பார்த்த போது பணம் குறையாமல் இருந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு காசோலை பற்றியும், பணம் எடுக்கப்படாதது பற்றியும் மின்னஞ்சல் அனுப்பினார். இவருக்கு வந்த தானியங்கி பதில் மின்னஞ்சலில் '72 - மணி நேரத்துக்கு உள்ளாக உங்கள் குறை நிவர்த்தி செய்யப்படும்' என்று இருந்தது.

72 - மணி நேரத்துக்கு பிறகும் எந்த தகவலும் வராததால் மற்றொரு மின்னஞ்சலை தட்டி விட்டார் மீண்டும் முன்பை போன்ற பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலே வந்தது .இதற்கிடையே அடுத்த மாத கணக்கு விவர அறிக்கை(statement)-யும் வர அதிர்ந்து போய் விட்டார் . சுமார் மூவாயிரம் ரூபாய் தொகைக்காக,ஆயிரத்து சொச்ச ரூபாய் அபராத தொகையாக விதித்து இருந்தார்கள் , வங்கிக்கு தொலைபெசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, திரும்பவும் பழைய பதிலே வந்தது. மீண்டும் சுமார் ஒரு வார துரத்தலுக்கு பின் அவரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது அவர்கள் சொன்ன பதில். அது 'தங்களுடைய காசோலை கிடைக்கவில்லை' என்பது தான். வங்கி எ.டி. எம்- யில் காசோலையை இட்டு விட்டதால் ஆதார பூர்வமாக நிரூபிக்கவும் முடியவில்லை.

இந்த சங்கடங்களில் சில நாட்கள் கடந்து போக வட்டி இன்னும் பெருகி இருந்தது. வாய் வலிக்க பேசியும் வங்கியினர் ஒரு உடன்படிக்கைக்கும் வராததால் எல்லாவற்றையும் கட்டிவிட்டு கடன் அட்டையையும் தலை முழுகினார்.

கடன் அட்டைகள் வேண்டுமா என்று யாராவது கேட்கும் போது அவருக்கு எற்படும் பதட்டத்தையும் அதனால் எற்பட்ட வலியையும் சுமார் ஆறு மாத காலமாகியும் தவிர்க்க முடியவில்லை ....

- தொடரும்

Friday, October 9, 2009

அழகிய முரண்


இருபத்தி ஐந்து பைசா
தொலைத்ததற்காக
விளக்குமாறால் என்னை
துவைத்த அம்மா
இரண்டாயிரம் மதிப்புள்ள
பூஜாடியை உடைத்தும்
கொஞ்சி கொண்டிருக்கிறாள்
என் மகனை.......

Wednesday, September 30, 2009

டமிலக அரசு விருதுகள்- எதற்காக ???


டமிலக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட, விருது பெற்றவர்களோ தனக்கு எதற்காக விருது வழங்கப்பட்டது என முழித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்த "சாதனை" அவரவர் வீட்டிலே தொலைபேசி வழியாய் ஒலிக்கிறது. சிலரது வீட்டில் நாமும் ஒட்டு கேட்டதில்...

கஜினி காந்த்: அன்பு கஜினியே, இளைஞர்களின் இதய துடிப்பே.....அரசியலுக்கு இப்போது வருவேன், அப்போது வருவேன் என அலம்பு காட்டி அலுவா கொடுத்தவனே, தேர்தலில் எனக்காய் "வாய்ஸ்" தந்தவனே, சின்ன பையன் 'சாகுல் காந்தி' அரசியலுக்கு அழைத்த போது கூட என் கண் அசைவுக்கு காத்திருந்தவனே... இதோ பிடி உனக்கான விருதை..

ஜமல ஹாசன்: தம்பியே என் தங்க கம்பியே... ஒவ்வரு மேடையிலும் என் புகழ் படுபவனே... எனக்கு கேமராவில் மட்டும் நடிக்க வராது என புரிந்து 'துசவதரத்தில்' என்னை போன்ற ஒரு டூப்பை நடிக்க வைத்தவனே, 'தன்னை போல் ஒருவனில்' என் குரலையும், என் வீட்டையும் பதினெட்டு திக்கும் பரப்பியவனே... இதோ பிடி உனக்கான விருதை

கிரிஷா: அழகிய கிரிஷவே உன் அழகை கண்டேனம்மா "லூசா லூசா "- வில் இருந்தே. 'சுருவி'-யில் நீ ஆடிய ஆட்டதுக்க்காகவே பாதி கோடம்பாக்கத்தை உனக்கு எழுதி வைக்க எண்ணி இருந்தேன். இடையில் ஈழ தமிழர் சோகம் என்னை கவ்வியத்தால் ஒத்தி வைத்தேன். 'வலைமாமணி' கிரிஷவே இதோ உனக்கான விருது.

சுடிவேலு

மதுரை காந்துடன் ஒன் டூ ஒன் ஆடியவனே. ஐயா ஐயா என விளித்து, ஆயிரம் தடவை காலில் விழுந்த உன் அலப்பறை தாங்காமல் தருகிறேன் உனக்கும் ஒரு விருது.

பைரமுத்து: இனிய பைரமுத்துவே ...மாதத்திற்கு ஒருமுறையாவது மேடையில் 'ஐஸ்' மழையை பொழிந்து என்னை ஜலதோஷம் கொள்ள செய்பவனே... அடுத்து நீ எழுத போகும் கோபாலபுரத்து காவியத்திற்காகவே இப்போதே தருகிறேன் ஓர் விருது.

சிறந்த வரைநடை ஆசிரியர்: ................................................(வெக்கம், மானம், சூடு, சொரணை உள்ள தமிழனாக எம்மை கருதுவதால் இதோடு நிறுத்தி கொள்கிறோம்.)

பின் குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண் படுத்த அல்ல. எங்கையாவது புண் ஆகி இருந்தால் சொந்த செலவில் மருந்து வாங்கி போட்டு கொள்ளவும்.

Monday, September 28, 2009

புரிதல்


வருடங்களுக்கு பிறகு
நகரத்தின் ஓர் முனையில்
எதோச்சையாய் சந்தித்த
கல்லூரி தோழியின்
முதல் கேள்வி
"குடிச்சிருக்கியா ?"

Thursday, September 17, 2009

எஸ். எம். எஸ். ராசாக்களுக்கு.....


இன்றைய நாள் புலரும் முன்னரே எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. நண்பர் ஒருவர் எனக்கு பார்வர்ட் செய்திருந்தார். அது "AB + blood Required for a heart surgery in chennai. Please contact arun 98414XXXXX" . நான் தொடர்ந்து "ரத்த தானம்" செய்து வருவதாலும், AB + ரத்த பிரிவை உடைய, தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையில் இருப்பதாலும் இது முக்கியமான குறுஞ்செய்தியாக எனக்கு பட்டது. எங்கே வர வேண்டும், என்றைக்கு தேவை படுகிறது, எவளவு தேவைபடுகிறது என்பதை அறிய குறுஞ்செய்தி அனுப்பிய நண்பரை தொடர்பு கொண்டேன். அவரோ தனக்கு தெரியாது எனவும், தனக்கு வந்த செய்தியை தான் எனக்கு பார்வர்ட் செய்ததாகவும் கூறினார். உடனே அந்த குறுஞ்செய்தியில் கொடுக்கப் பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.

சற்று தாமதமாகவே எதிர் முனையில் இருந்தவர் "ஹலோ" என விளிக்கும் குரல் கேட்டது, தூக்கம் இன்னும் கலையவில்லை என்பது மட்டும் புரிந்தது . நான் மெதுவாக "சார் பிளட் வேணுமுன்னு மெசேஜ் வந்தது....." நான் முடிக்கவே இல்லை.... அதற்குள் அவர் "அது ஏதோ பரதேசி பய என்னோட நம்பர கொடுத்திருக்கான்............" திட்டி கொண்டே இருந்தார் . "ரொம்ப சாரி சார் டிஸ்டர்ப் பண்ணினதுக்கு" என்று கூறி இணைப்பை துண்டித்தேன்...

ஒரே நேரத்தில் அழுகையும் கோபமும் என்னையும் மீறி பீறிட்டு வந்தது.... எனக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய நண்பரிடம் கத்தி தீர்க்க அலைபேசியை எடுத்து விட்டு பின் மனம் மறுதலித்ததால் "நீ அனுப்பிய குறுஞ்செய்தி பொய்" என்பதை மட்டும் செய்தியாகவே அனுப்பி வைத்தேன்.

இது போல் எண்ணற்ற குறும் செய்திகள் எனக்கு வருவது உண்டு, ஆனால் பெரும் பாலும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளவே முடியாது. தொடர்பு கொள்ள முடியும் பட்சத்தில் என் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ உதவியும் செய்து இருக்கிறோம்.

அறிவியலின் அசுர வளர்ச்சியில் குறும் செய்தி ஒரு அற்புதம் என்பேன். அதே வளர்ச்சியை தன் சொந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த உபயோகிப்பவர்களை மனிதன் என்பதா?மிருகம் என்பதா ?

தயவு செய்து இது போன்று குறும் செய்திகள் வரும் பட்சத்தில் கூடிய மட்டும் நாமே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு செய்தியின் உண்மையை அறிந்து கொள்வோம், அதன் பின் நம்மால் நேரடியாக உதவ முடியா விட்டால் அதை பார்வர்ட் செய்வோம். இப்படி செய்யும் பட்சத்தில் நல்லதை நாம் செய்ய இயலா விட்டாலும் கெட்டதற்கு துணை போக வில்லை என்ற நிம்மதியாவது நம்மோடு இருக்கும்.

குறும் செய்திகள் வழியாக பரப்பப்படும் மோசடிகள் ஒருசிலவற்றை கீழே கொடுத்து உள்ளேன். இப்படி வரும் குறும் செய்திகள் 100% பொய் ஆனவை.

"pls forward and help... +9190477XXXXX. I am kavitha studiying 1st B.Sc ............. college, chennai. I lost my left eye in an accident. The operation cost 1 lakes. I dont know u but, if u send this sms i'll get 1 rs. If u have free sms plz fwd atleast 10 members. You dont neglect htis s tru. May God bless U 4 ever."

"Pls who love your mother ples help 2 dis mother. I am anitha 98947XXXXX? My son heart operation. I u forward dis mgs i will get 10 ps? I beg u 2 save my child plz"

எனவே இப்படி வரும் குறும் செய்திகளையும் அதை அனுப்பும் எஸ். எம். எஸ். ராசாக்களையும் முற்றிலும் புறக்கணிப்போம். நன்றி.

Tuesday, September 15, 2009

கண்டன கூட்டம் - தொகுப்பு

வணக்கம்

12-09-2009 அன்று சென்னையில் 'சேவ் தமிழ்' குழுமத்தின் சார்பாக ஊடகங்களுக்கு எதிராக இலங்கை அரசின் வன்முறையை எதிர்த்து நடந்த கண்டன கூட்டத்தை பற்றி பல்வேறு தமிழ் இணைய தளங்களில் வந்துள்ள சுட்டிகளை இங்கே தொகுத்து அளித்து உள்ளேன். கலந்து கொண்ட நல் உள்ளங்களுக்கு எமது நன்றி.

http://puthinam.com/full.php?2b24OOo4b34U6D724dabVoQea03Y4AAc4d3cSmA2e0dW0MtRce03f1eC2ccdUcYm0e

http://article.wn.com/view/WNAT43b0bcb8c8f0b581e9c1804e0eb5fe79/

http://www.tamilwin.org/view.php?2aSWn5e0dlj0C0ecGG7V3b4X9E84d3g2h3cc2DpY3d436QV2b02ZLu3e

http://www.eelamhomeland.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1252920425&archive=&template=news

http://www.pathivu.com/index.php?mact=News,cntnt01,print,0&cntnt01articleid=3468&cntnt01showtemplate=false&cntnt01returnid=54

http://www.meenagam.org/?p=10195

http://thatstamil.oneindia.in/news/2009/09/15/tn-leading-journalists-condemn-srilankas-fascist.html

http://24dunia.com/tamil-news/search/தமிழர்களை-சங்கிலி.html

http://inioru.com/?p=5305

http://www.kunrinkural.com/script/viewnews.asp?newsid=0900517878hhnnj














Thursday, September 10, 2009

ஊடகங்களுக்கு எதிராக இலங்கை அரசின் வன்முறை - கண்டன கூட்டம்


ஈழத்தில் தமிழரின் கடைசி சொட்டு ரத்தத்தை குடித்த பின்னும் அதனுடைய வெறி அடங்காமல் திறந்த வெளியில் சிறை கூடங்களை அமைத்து அப்பாவிகளை இன்றும் சிதைத்து வருகிறது பேரினவாத சிங்கள அரசு... போர் நின்று விட்டது என அறிவித்து சுமார் 5 மாதங்கள் ஆகியும், அதனுடைய பயங்கரவாத எல்லைகளை இன்னும் விரிவு படுத்தி கொண்டே இருக்கிறது.

பெருவாரியான ஊடங்கங்களுக்கு எந்த தகவலை அளிக்காமலும், பல ஊடகங்களை பணத்தின் பெயரால் வளைத்து போட்ட இலங்கை அரசு எதற்கும் அடிபணியாமல் உண்மைகளை வெளி படுத்திய பத்திரிக்கையாளர்களை "சட்டம்" என்ற கொடூர கைகள் மூலம் அடக்க முயல்கிறது. அந்த அடக்கு முறைகளுக்கு சமீபத்திய இரை 'சண்டே டைம்ஸ்' இன் தமிழ் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசநாயகம்.

அரசுக்கு எதிராக எழுத புலிகளிடம் பணம் பெற்றார் என பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டி, இலங்கை நீதி மன்றத்தின் கருப்பு ஆடுகள் அவருக்கு 20 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கி உள்ளது.

நம் கண்முன்னே நடக்கும் இந்த அநீதிக்கு எதிராய் குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வரு தமிழனின் கடமை. போரின் போது இறையாண்மை பேசிய மவுனிகள், தமிழர்களுக்கு ஆதரவான எழுது உரிமையை பறிக்கும் இந்த நிலையிலும் மவுனமாகவே கிரிக்கெட் ஸ்கோர் பார்த்து கொண்டு இருகிறார்கள். வரலாறு இவர்களுக்கு இன்றைய சூழ்நிலையின் விபரீதத்தை கற்று கொடுக்கும் என்று எண்ணி இவர்களை நிராகரிப்போம்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக இலங்கை அரசின் அடக்கு முறைகளை கண்டித்து 'சேவ் தமிழ்' (Save Tamil) குழுமமானது மூத்த பத்திரிகையாளர்களை கொண்டு சென்னையில் கண்டன கூட்டத்தை நடத்த உள்ளது. உதிர்ந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் குரலை உயர்த்தி பிடிக்க உங்கள் வருகையை பணிவன்புடன் எதிர்பார்கிறோம்.

நாள்: 12-09-2009
நேரம்: காலை 10:30
இடம்: தெய்வ நாயகம் மேல் நிலை பள்ளி, வெங்கட் நாராயண ரோடு, தி நகர், சென்னை.



மேலும் தகவல்களுக்கு

9840090898, 9884468039


Saturday, September 5, 2009

பணம் சம்பாதிக்கலாம் வாங்க

அனிமேசன் துறையில் ஒரு புதிய முயற்சியாக குழந்தைகளுக்கான பாடல்களை 3 D அனிமேசன் முறையில் தயாரித்து உள்ளோம். தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் இந்தியாவில் பிற மாநிலங்களிலும் இதை விநியோகம் செய்ய விநியோகிஸ்தர்கள் தேவை.

விநியோகிஸ்தர்கள் என்ற உடன் லட்சக்கணக்கான பணம் இருந்தால் தான் இதில் இறங்க முடியும் என்று தவறாக எண்ண வேண்டாம். தனம்பிக்கையும் ஆர்வமுமே இதன் முதல் தகுதிகள்.

இந்த ரைம்ஸ் DVD - ன் டிரைலர் - ஐ காண இங்கே சொடுக்கவும்


மேலும் இதை பற்றி தகவல்கள் அறிய மின்னஞ்சல் செய்ய வேண்டிய முகவரிகள்

weaversmedia@gmail.com
stalinfelix2000@gmail.com


Tuesday, September 1, 2009

ஓணமும் ஊஞ்சலும்.........



அழகான புகைப்படங்களுடன், ஓண வாழ்த்துகளை சுமந்து பத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் எனக்கு வந்து சேர்ந்தது.... அலுவலகத்தில் இருந்த பெரும்பாலான மலையாள நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுத்து விட்டு சொந்த ஊர்களுக்கு போய் இருந்தார்கள். சென்னையில் நிரந்தரமாக தங்கி இருந்த ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே அலுவலகம் வந்திருந்தார்கள், அவர்களுடைய இருப்பிடம் சென்று கை குலுக்கி விட்டு மீண்டும் எனது இருக்கைக்கு வந்து பணியை தொடர்ந்தேன்..... ஆற்றில் விழுந்த இலையை போல் நினைவுகள் என்னை என் பால்ய வயதின் ஓண நாட்களுக்கு இழுத்து சென்றது.....

எங்களுடைய கிராமம் கேரள மாநிலத்தின் வெகு அருகில் இருந்ததால், அம்மாநிலத்தின் மொழி, கலாச்சாரம், உணவு என பல வாழ்வியல் அம்சங்களை எங்களையும் அறியாமல் சுமந்து வந்தோம் ... ஓணம் எதற்காக கொண்டாடப்படுகிறது என அறியாத வயதிலும், அதை என்னை போன்ற பால்ய வயது சிறுசுகள் கொண்டாட எண்ணற்ற காரணங்கள் கண் முன்னே கிடந்தன....

முதலாவது காரணம், காலாண்டு பரீட்சை லீவு என்ற 'ஓண பரீட்ச லீவு'. பொதுவாக காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஓண பண்டிகைக்கு முன் முடிந்து விடுவதாலும், அதை ஒட்டி கிடைக்கும் 10 நாள் விடுமுறையே என் போன்ற 'ஆசிரியரால் உதைபடும்' பள்ளி மாணவனுக்கு பெரும் இளைப்பாறல்.

இரண்டாவது காரணம் 'தின்பண்டங்கள்'.... பெரும்பாலான உறவினர்களும், நண்பர்களும் கேரளாவிலே வேலை செய்து, இப் பண்டிகையை ஒட்டி ஊர் திரும்புவார்கள். இப்படி வருபவர்கள் வாங்கி வரும் தின்பண்டங்களால் வீடு முழுக்க சில நாட்கள் கம கமக்கும்...

மூன்றாவது முக்கிய காரணம் 'ஊஞ்சல்'.... அந்த விடுமுறை நாட்கள் முழுவதும் எங்களை உயிர்ப்பித்து வைத்திருக்கும் ஒரே விளையாட்டு.... ஓண பரீட்சையின் இறுதி நாளில் தான் பெரியவர்கள் ஊஞ்சல் கட்டி தருவார்கள்.... ஓண ஊஞ்சல் பெரும்பாலும், வீட்டை சுற்றி உள்ள பெரிய மரங்களிலே தான் இடுவார்கள்.. எல்லோருக்கும் வீட்டை ஒட்டி மரங்கள் இருப்பதிலை, ஆனால் எனக்கு வாய்த்தது. அழகான ஒரு மாமரம், எங்கள் வீட்டில் மேல் சாய்த்து வளர்ந்து நின்றது... நல்ல வலுவான தேங்காய் நாரினால் செய்யப்பட்ட கயிறையே ஊஞ்சல் கட்ட உபயோகப்படுத்துவார்கள், நைலான் கயிறுகள் இங்கே நிராகரிக்கப்படும், வலுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடும் அபாயம் உள்ளதால்.....

முதலில் கயிறு கட்ட போகும் கொம்பில், ஒரு கோணிப்பையை(சாக்கு) வைத்து விட்டு அதன் மேல் கயிற்றின் நடு பகுதியை மரத்தின் கொம்போடு கட்டுவார்கள். கோணிப்பை வைப்பதற்கு காரணம் கயிறு வெகு விரைவில் தேய்ந்து விடாமல் இருப்பதற்கே... கயிற்றின் முனைகளில் நல்ல ஒரு மரத்தின் வலுவான கம்பை வைத்து கட்டுவார்கள்... பெரும்பாலும் முனை தேய்ந்து இருக்கும் உலக்கையே இதற்கு பயன்படும். அப்புறம் என்ன... ஆட்டமோ ஆட்டம் தான்...

ஊஞ்சலில் ஒருவர் ஆட்டி விட மற்றொருவர் ஆடி வருவார். நான் ஒரு நண்பனை 25 தடவை ஆட்டி விட்டால் அவனும் என்னை 25 தடவை ஆட்டி விட வேண்டும். எழுதப்படாத ஒப்பந்தம் இது... சிலர் தான் மட்டும் ஆடி விட்டு ஓடி விடுவதால் விளையாட்டு ரோதனை ஆகி விடுவதும் உண்டு..

ஆடுபவரை ஆட்டி விட்டு, அந்த ஊஞ்சலின் அடியில் வேகமாக ஓடுவதற்கு பெயர் தண்ணி குடம் எடுப்பு... நல்ல தைரியமானவர்களால் மட்டுமே இது போன்ற ஒரு சில வித்தியாசமான வித்தைகளை காட்ட இயலும். இன்னொன்றும் உண்டு ஒருவரை உலக்கையின் மேல் உட்கார வைத்து விட்டு, மற்றொருவர் உலக்கையின் மேல் நின்று கொண்டும் ஆடுவது, மிகவும் அபாயம் ஆனதும் கூட....... தவறி விழுந்து விட்டால் அடுத்த விடுமுறை நாட்கள் அனைத்தும், கைகளில் கட்டுகளோடு மற்றவர்கள் ஆடுவதை பார்த்து கொண்டு இருக்க வேண்டியது தான்.

எவ்வளவோ ஆடி களைத்தாலும், பரீட்சை விடுமுறை முடியும் போது நைந்த கயிரோடும் , பிய்ந்த கோணிப்பையோடும் ஊஞ்சல் கழற்றப்படுவதை பார்த்து மனம் விசும்பாமல் இருப்பதில்லை..

சென்ற விடுமுறை நாளில் நாங்கள் வசித்த முதல் வீட்டிற்கு சென்றிருந்தேன்...... பால்யத்தில் ஊஞ்சல் விளையாடிய மாமரம் அதன் வனப்பு குறைந்து வயதாகி நின்றது.. ஆசையோடு தடவி பார்த்தேன். நீண்ட நாட்கள் கழித்து என்னை பார்த்த மகிழ்ச்சி அதற்கு இருந்திருக்க வேண்டும் பலமாய் அசைந்து எனக்கு மறு மொழி சொன்னது.. நாங்கள் ஓண ஊஞ்சல் கட்டிய கொம்பு சற்று பருத்து இன்னொரு ஊஞ்சலுக்காய் காத்து கொண்டு இருந்தது ,ஆனால் விளையாட தான் யாருமே இல்லை. அக்கம் பக்கத்தில் இருந்த குழந்தைகள் வீட்டில் கணிப்பொறியோடு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள்..

Wednesday, August 26, 2009

எதிர் வீட்டுக்காரம்மா



"நிஜமாவா சொல்ற?" ஆச்சரியத்தோடு மனைவியை நோக்கி கேட்டேன். லாட்டரியில் பரிசு விழுந்தது என சொல்லியிருந்தால் கூட இத்தனை ஆவேசமாக கேட்டிருப்பேனா என சந்தேகம்...... 'அப்படி என்ன' என்று யோசிக்கிறீர்களா?...... நாங்கள் வசிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் இருக்கும் எதிர் வீட்டுக்காரம்மா என் மனைவியிடம் பேசியிருக்கிறார்கள்.

'யோ.....'-பொறுங்கள் நீங்கள் முறைப்பது புரிகிறது.. எதிர் வீட்டில் இருக்கும் அந்த பெண்மணியை பற்றி முழுதாய் தெரிந்திருந்தால் இப்படி முறைக்க மாட்டீர்கள்...... 'ஓ.....அப்படியா' என கேட்பீர்கள்........

பேச்சுலராய் சுமார் 10 ஆண்டுகளாக சேவல் பண்ணையில் காலத்தை ஓட்டி விட்டு, திருமணமான புதிதில் மனைவியோடு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடி வந்தேன்...... இங்கே குடி புகுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வந்திருந்தேன். பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் ஆயிற்றே நாமாகவே அறிமுகப்படுத்தி கொள்வோம் என்று ஆர்வமிகுதியால் காலிங் பெல்லை அழுத்த, நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் கதவை திறந்தார்.

நான் தான் பேசிக்கொண்டிருந்தேனே ஒழிய அவரிடம் இருந்து ம்.... ஹும்..... என் கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்...... அவருடன் பேசிக்கொண்டிருந்த அந்த இரண்டு நிமிடங்களிலும் வீட்டை கண்களால் ஒரு நிமிடம் அலசி விட்டேன்.

மத நம்பிக்கை மிகுந்த குடும்பம் என்று சுவரில் இருந்த புகைப்படங்கள் காட்டியது, தொலைக்காட்சியில் 1:30 மணிக்கு வரும் தொடரின் நாயகியின் சோகத்தை பங்கெடுத்து கொண்டிருந்தார் அவருடைய மனைவி(எதிர் வீட்டுக்காரம்மா). அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இருப்பதற்கான முகாந்திரமே இல்லை.
நான் பேசி திரும்பிய போது சம்பிரதாயமாக என் பெயரை கேட்டார், நானும் சொல்ல, மேலும் அவருடைய முகம் இருண்டு போனது தான் மிச்சம்........ அவருக்கான "நான்" அல்ல என்பது மட்டும் புரிந்தது.

மனைவியோடு குடி வந்த முதல் மாதத்தில் நேருக்கு நேராக சந்தித்த போதும் கூட எங்கள் புன்னகைக்கு பதிலாக சம்பிரதாய புன்னகையை மட்டும் உதிர்த்து போனார்கள்......

பெரும்பாலான நேரங்களில் வீடு பூட்டியே இருந்தது..... நானும் அவர்களிடம் பேச வேண்டும் என்று ஓரிரு முயற்சிகளுக்கு பின் முயற்சிக்காமலே விட்டு விட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்....'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்று சொல்வார்கள். அது போல தான் இன்றும் நடந்திருக்கிறது...... அது தான் என் ஆச்சரியத்துக்கு காரணம். வட இந்தியாவில் கணவரோடு வாழ்ந்து கொண்டிருந்த அவருடைய ஒரே மகள் கர்ப்பமுற்று அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். என் மனைவி ஏழு மாத கர்ப்பிணி ஆனதால் "எந்த மருத்துவமனைக்கு செல்கிறீர்கள், எங்கே பரிசோதனை செய்துக்கொண்டிருகிறீர்கள்" என்று கேட்பதற்கே இத்தனை நாள் வனவாசத்தை உடைத்து இன்று பேசியிருக்கிறார்......

அவர் பதில் பெற்று கொண்டதோடு விட்டிருக்கலாம். கேள்வி என் மனைவியை நோக்கி திரும்புகிறது.
"உனக்கு பிரசவம் அந்த ஆஸ்பத்திரியிலையாம்மா பாப்பாங்க?"
"இல்லங்க..... நாங்க ஊருக்கு போயிருவோம்"
"ஐயோ... ஊருக்கா? எப்போ, எப்படி போவீங்க?"
"அடுத்த வாரம், ரயில்ல"
"ரயில்லையா..... கர்ப்பிணி பொண்ணுங்க கடலு, ஆறு தாண்டி போக கூடாதுண்ணு சம்பிரதாயம் இருக்கு தெரியுமா?"

என் மனைவி என்ன பதில் சொல்லியிருப்பாள் என நான் கேட்கவே இல்லை.ஏனோ நீண்ட நாட்களுக்கு பின் பெரியாரை படிக்க தோன்றியது...... .