Saturday, February 28, 2009

பயணங்கள்

பயணங்கள் எப்போதும் சுவாரசியம் ஆனவை.
ஒவ்வொரு பயணமும் எப்போதும் ஏதோ ஒரு கதையை, வரலாற்றை சொல்லி கொண்டே நீள்கிறது தீராத வானத்தை போல. வாழ்க்கையின் முடியாத பக்கங்களில் புதர் மண்டி கிடக்கும் சில புதிர்களான - சொல்ல முடியா ரகசியங்களையும், கவலைகளையும், சில பயணங்கள் எப்போதுமே ஞாபகப்படுத்தி விடுகிறது நாம் கேட்காமலே..............
நீண்ட நீள் பரப்பான நீர் தேக்கத்தில் ஒற்றையாய் நிற்கும் பட்டுப் போன மரத்தில் அமர்ந்து இருக்கும் ஊர் குருவி எப்போதும் அழகு தான். நீண்ட வயல் பரப்பில் தலை கவிழ்த்து மண்புழு தேடும் வாத்தும், கூரிய பார்வையுடன் காத்திருக்கும் கொக்கும், மழை சாரலும், நாத்து நடும் பெண்மையும், இரு புறமும் வீடு இருக்க நடுவே நடமாட்டம் இல்லாது நீண்டு கிடக்கும் செம்மண் பாதையும் அர்த்தப்படுத்தி கொண்டே இருக்கிறது அழகான வாழ்வின் பக்கங்களை............

Friday, February 27, 2009

முத்துக்குமரனுக்கு வீர வணக்கம்.....


முத்து குமரனே.......
நீ மண்ணில்
புதைக்கப்பட்டாய் என்பதை விட
எம் நெஞ்சில்
விதைக்கப்பட்டாய் என்பதே நிஜம்........

உன் எரிந்த உடலை கூட
துருப்பு சீட்டு ஆக்கியவனே
அனலாய் கொதிக்கிறது
ஆறு கோடி இதயம்
நீ கொளுத்திய
ஒரே பொறியால்............

இன்று நீறு பூத்து நிற்கும்
நம் இளைஞர் படை
வீறு கொண்டு வேங்கையாகும் நாளில்
கடல் கூட தாங்காது
இல்லாமல் போகும் இலங்கை படை.........

உன் சம கால நூற்றாண்டில் யாம்
வாழ்த்தோம் என்பதே
நாளைய சரித்திரத்தில் நாம்
பேசிக் கொள்ளும் பெருமை.....

வீரனே.... யாம் இருக்கும் நாள் வரை
உன் நினைவுகள் எம்மோடு இருக்கும்...
யாம் இல்லாத நாளில்
நாம் உன்னோடு இருப்போம்.....

அறுதிட்டு சொல்கிறோம்...........
ராமன் வாழ்ந்த தேசம் தாண்டி
ராவணன் வாழ்ந்த தேசத்தில் - ஏதோ
ஓர் ஈழ தாயின் கருவறையில்
இன்று உதித்திருப்பாய் - நாளை
நடக்கும் புனித போருக்காய்!!!!!!!!!!!!!

Tuesday, February 17, 2009

பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

முதல் பிரசவத்தில் இரட்டை பெண்ணாய்
பிறந்திருக்க தான் ஆண்மை பீற்றியவன்
மூன்றாவதும் பெண்ணாய் கிடைக்க
விழி திறக்கா ஒளி நேரத்தில்
நெல்லுக்கு இரையாக்கினான்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

காதல் யாசகம் கேட்டவனுக்கோ
கணவன் என இடம் தர
கண்ணீரை சுமக்க வைத்து
காணாமல் போன அவனை எண்ணி
கல்லறைக்குள் போய் அழுதாள்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

தன்னில் பாதி தங்கை என
உற்சாக ஊஞ்சல் ஆடியவன்
ஆறறிவு பின்னாளில் இவனை ஆள
அப்பாவின் உயிலை பிரிக்காமல்
உறவை மட்டும் பிரித்து வைத்தான்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

ஊராடங்கி இரண்டாம் ஜாமம் ஆயினும்
கண்விழித்து கட்டியவனுக்கு
உடல்-உள்ள பசி போக்கியவள்
என்றோ ஓர் நாள் ஆசையாய் அணைக்க
புறம் பேசி புறமுதுகிட்டு தூங்கினான்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

பத்து மாதம் பேணி காத்து
தான் குருதியை பால் ஆக்கி
பொன் மேனி தந்தவளுக்கு
பின் ஒரு நாள் பலூற்றி
அனுப்பி வைத்தான் மொத்தமாய்
பெண்ணே ஏன் பெண் ஆனாய்..........

ஒரு ஆசிரியரின் பிரியா விடை

என் இளவேனில் கால செல்வங்களே...
நாளைய உலகின் நம்பிக்கைகளே...
இடம் மாறி பிறந்தோம் என்பதை விட
இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்!

மார்கழி யின் மென்பனி போலே என்
உயிர் ஊடுருவிய உள்ளங்களே.........

உம் வாழ்வு இன்றும் என்றும்
விருட்சமாய் வளர வாழ்த்துகள்!

எண்ணி வைத்த எண்ணாயிரம் கனவுகள்
உம் பின் நடை பயில வாழ்த்துகள்!

தந்தையும் தாயும் உம் புகழில்
பெரும் பெருமை கொள்ள வாழ்த்துகள்!

மாலை நேர விளையாட்டும்
மட்டில்லா கணிப்பொறி வகுப்பும்
நீண்ட நேர உரையடாலும்
எண்ணி சிரித்த நொடிப்பொழுதும்
நெஞ்சமெங்கும் நேசத்தோடு நிறைந்து இருக்க........

நீண்ட என் கனவுகள் துளைத்து எடுத்து
கடமைக்கு அசைத்து செல்ல
பொங்கி வரும் இந்நினைவுகளோடு
நாளை மீண்டும் சந்திப்போம் என
இமை நீர் அனைத்தும் தீர்ந்து போய்
இன்று பிரிக்கிறோம்
மனம் இசைக்கும் தீர சோக கானத்துடன்...........................

நேற்று... இன்று... நாளை...

மெல்லிய பனித்திரையாய் விரிந்தன
நேற்றைய நாட்கள் என் மனதோரம்
மார்கழியின் குளிரையும் மீறி
சூரியன் சிரிக்காத ஆறரை மணிக்கெல்லாம்
ஐக்கியமாகி விடுவோம் குளக்கரை ஓரம்.....
ஐந்து மயிலுக்கு அப்பால் ஊதும்
ஆலை யின் ஓசை கேட்ட பின்
உண்மை உறைக்க ஓடுவோம் பள்ளிக்கூடம்
உலராத தலைமுடியுடன்.......

நேற்றைக்கு எடுத்த பாடத்திற்கு
இன்று பெரம்பு அடி
பக்கத்தில் இருக்கும் கவிதாவிடம்
மிரட்டி பறித்த புது பென்சில் குச்சு
இடைவேளைகளில் ஐஸ் தாத்தா கொடுத்த
உடைந்த ஐஸ் துண்டுகள்
மத்தியான கடும் வெயிலில்
தள்ளு முள்ளு நடத்தி வாங்கிய சத்துணவு!!!!
பாட வேளையில் தூங்கியதிற்காய் அவமானம் பொங்க
பெஞ்சு மேல் ஏறி நிற்க வைத்த தண்டனை
என பள்ளி கூட பொழுதுகள் போக
புதையுண்டோம் மாலை நேரம் கிராமத்து விளையாட்டுகளில்......

அடை மழை காலங்களில் பறித்த காளான்
விடுமுறை நாட்கள் பிடித்த தும்பி
தெருகடையில் வாங்கி தின்ற தேன்மிட்டாய்
நண்பானோடு கட்டி விளையாடிய செம் மண்வீடு
என காலங்கள் உருண்டோட
காணாமல் போனேன் எனை வளர்த்து எடுத்த
பாட்டியின் மறைவுக்கு பின்.....
ஆம்.......
பெற்றோரின் முகம் பார்க்க
பாக்கியம் இல்லாதவனை
பக்குவமாய் விழிகளுக்குள் சுமந்தவள்
நெடும் வழி நடுவில் எனை விட்டு செல்ல
கரம் பற்றி இழுத்தது அனாதை விடுதி
என் கிராமத்து அத்தியாயம் முடிந்தது அன்றோடு....

"காபி குடிங்க" என மனைவி சொல்ல
ஏழு கடலும், மலையும் தாண்டி
இரண்டு தேவதைகளை மக்களாய் பெற்று
ஐம்பது வயதை கடந்த பெருத்த உடலோடு
இன்றைய நாளுக்குள் வந்தேன்...

"தமிழகத்தில் வெள்ள அபாயம்" என
தலைப்பு கோடிட்டீருந்த இணையதள பத்தியை
மேம்போக்காய் நான் மேய
கண்ணிலே குருதி வழிந்தது
எனது ஊரின் பெயர் கண்டு!
கிராமமே தண்ணீரில் மிதப்பதாய்
செய்தி சொல்ல - என்
இமைகள் கண்ணீரில் மிதந்தது....

கால் நூற்றாண்டாய் கிராமமே செல்லாதவன்
இன்று அழுது என்ன பயன்
அறிவும், அனுபவமும் என்னுள் விதைத்த
என் மண்ணிற்கு பதில் என்ன செய்தேன் ?
நான் கிளை விட்டது அயல் நாடு ஆகிணும்
எனது வேர்களை எப்படி மறந்தேன்???
காசே கடவுள் ஆகி விட்ட கலி காலத்தில்
மனைவியும், மக்களும் முன் நிற்க
மறந்தே போனேன் மொத்தமாய் கிராமத்தை....

கொலையும், களவும் மட்டுமா குற்றம்
முதல் சுவாசம் தந்த புண்ணிய பூமியை
புறம்தள்ளி செல்வதும் குற்றமே
இந்த குற்றவாளிக்கு
நாளை என்பது நிரந்தரம் இல்லை
ஆயினும் நாட்கள் கூடுமெநின் என்றேனும்
தேடி பார்க்க கூடும்
என் கிராமத்து வாசத்தில்
நான் தொலைத்த இதயத்தை.................

நண்பனே......

கால தேவன் உன்னை பறித்து
இன்றோடு முன்நூத்தி சொச்சம் நாட்களாம்
நண்பன் ஒருவன் நினைவுபடுத்த
தேக்கி வைத்த கண்ணீருடன்
மெலிதாய் என் நாடி துடிப்புகளும் சேர
பீறிடுகிறது உன் நினைவு......

ஒவ்வரு மனிதரின் இதயத்திற்குள் இறங்க
நாங்கள் பிரார்த்தனம் செய்ய
வெற்றியும்-தோல்வியும் சமமாய் பெற்று திரும்பினோம்
நீயோ.......
வெற்றியை மட்டுமே முழுமையாய் பெற்றாய்
அத்தனை பெருமிதம் பிடித்ததால் தான்
வெகு சீக்கிரம் சென்றயோ ???

எங்கள் கனவுகளுக்கு விதை விதைத்து
துளிர்க்க செய்தவனே
உன் கனவுகளோடு மட்டும்
கல்லறையில் அடங்கியது ஏனோ??

ஆடம்பரமும், ஆணவமும் ஆளும் உலகில்
அன்பால் எம்மை ஆண்டவனே
வெகு சீக்கிரம் முடி துறந்தது ஏனோ??

அசர வைக்கும் அறிவோடும்
அள்ளி தெளிக்கும் நகைச்சுவையோடும்
எம்மிடையே புன்னகையை உடுத்தியவனே
ஒற்றை நாளில் ஏன் பறித்தாய் அத்தனையும் !!

நய வஞ்சகமும், நம்பிக்கை துரோகமும் நிறைத்த
நீண்ட வாழ்க்கை எனும் கடல் கடந்து
நாங்களும் வருவோம் ஓர்நாள் அளவளாவ
அதுவரைக்கும் நினைவில் பொத்தி வைத்திரு
என்றோ நாம் வாழ்ந்த கல்லூரி நாட்களை.............

நட்பும்... கற்பும்...

என்றோ அலமாரியில் அடுக்கி வைத்த
புத்தகங்களை தூசி தட்டி, துடைத்த போது
ஒற்றையாய் விழுந்தது மயிலிறகு........
கூடவே நம் நினைவுகளும்... சில்லரையாய்......

ஞாபகம் இருக்கிறதா நண்பியே
என் இருபதாம் பிறந்த நாளும்
நீ கொடுத்த மயிலிறகும்
குட்டி போடாது என தெரிந்தும்
பத்திர படுத்தினேன் நம் நட்புக்காய்........

பேருந்து நிறுத்தத்தில் - நாங்கள்
செய்யும் மாலை கலாட்டாவில்
கலக்கவே இல்லை நான் - ஓர் நாள்
உன் ஒற்றை முறைப்புக்கு பின்..........

என் கல்லூரி கட்டணம் கட்ட
தடுமாறிய நாட்களில்
ஓசை இல்லாமல் உடைபட்டது
உனது உண்டியல்.......

பூதம் வருகிறது என பயம் காட்டி
மழலைக்கு சோறு ஊட்டும் தாயை போல்
மத்தியான பொழுதுகளில் என்
திருட்டு புகை பழக்கத்தை நிறுத்த - ஒருநாள்
பயந்தே சொன்னாய் நுரை ஈரல் புற்று நோயால்
செத்து போன உன் சித்தப்பாவின் கதையை !!!
உள்ளுக்குள் உதறி புகைப்பதை நிறுத்திய பின் தான் தெரிந்தது
எனக்காகவே ஓர் சித்தப்பாவை உருவாக்கி கொன்றதை......

காதல் எனும் கரும் குழியில்
நம்மை தள்ளி " கிசு கிசு" க்கள் வர
சுவாசமாய் வாழ்ந்த நட்புக்காய்
மனதுக்குள் கதறி நாம்
பேசி கொள்ளவே இல்லை பின் என்றுமே....

கல்லூரியின் கடைசி நாளிலும்
நம்மில் மெலிதாய் வெடித்த கண்ணீர் துளிகள்
பிரியா விடை தந்தது இருவருக்கும்
கனமான மவுனங்களுடன்......

உனக்கு திருமணம் ஆனதும் - பின்
இரண்டு ஆண் மக்கள் பெற்றாய் என்று
காது வழி வந்த செய்திகளாலே
சந்தோசமாய் வாழ்கிறேன்
நீ சந்தோசமாய் வாழ்கிறாய் என்று !!!

அன்று பாடங்களை சுருக்கி நீ
எனக்கு கொடுத்த குறிப்புகளில்
இன்று குறிப்பு எடுத்து கொள்கிறான்
என் மகன் - பாவம்
கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை அவனுக்கு
உன் போல் ஓர் தோழி....

தோழியே !!!
கண்ணியம் தவறாத வரை
நட்பும் கற்பும் ஒன்று தான்!!
காலங்களால் களவாடப்பட்ட
நொடிப்பொழுதுகள் வாழ
மீண்டும் மீண்டும் பிறப்போம்
நம் நட்புக்காய்...............

தொலைத்து போகிறேன்.....

கடற்கரை மணலில்
நீ நடந்த சுவடுகளை கூட
பதியம் போட்டு வைத்திருந்தேன்
இன்றோ.....
உன் காதலுக்கு யாசகம் கேட்கும்
எறும்பாய் எனை உணர்ந்து
நசுக்கி செல்கிறாய்
அதே பாதங்களால் !!!

கட்டி எழுப்பிய காதல் கனவுகளை
கலைத்து விடலாம் என முன்பே
என் முன்நின்று சொல்லி இருக்கலாம்
இன்றோ....
புறமுதுகில் புண்பட்ட
போர்வீரனை விட துடிக்கிறேன்
குத்தியவள் நீ அல்லவா!!!

நீ தந்த வலிகளால்
இரத்த கூடுகள் உடைந்து சாய
நாம் நேசித்த கணம் மறக்க
வழி கேட்டேன் மனிதர்களிடம்...
மதுவை தேடு என்றான் ஒருவன்
மாதுவை நாடு என்றான் மற்றொருவன்
ம் ம் ம் ....
சலிப்பை தந்த வழிகள் கேட்டு
உனை நோக்கி ஆச்சரியமாய் எனை அசைத்த
மனதை கேட்டேன்
மரணத்தை தொடு - என்றது

முடிவு ஒன்று கிடைத்தவனாய்
வாழ்க்கை என்னும் நீண்ட யாத்திரையில்
காதல் எனும் அத்தியாத்தால்
வீழ்ச்சியின் விழும்பில் நின்று
தொலைத்து போகிறேன்
உனக்கான என்னையும்
எனக்கான என் ஆத்மாவையும்.....

உன் அரும்பு முகம்!!!



நினைவு இருக்கிறதா??
அந்த பெண் பார்க்கும் படலம்
உனக்கோ பதினேழு
எனக்கோ இருபத்தி ஒன்று இருக்கும்
புதிதாய் சேலை உடுத்தி இருந்தாய்
கால் விரல் நுனி முதல்
கேசம் வரை நான் உன்னிலே அலச
என் ஆண்மையின் வெம்மை தாளாமல்
வெட்க பின்னல்கள் உன்னில் தெறித்து
படர விட்டிருந்தாய் பார்வையை தரையில்
சற்றே ஏமாற்றததுடன்.............

சம்மதம் தெரிவித்து நான் செல்கையில்
ஜன்னல் ஓரமாய் நின்று
என் முதுகு மட்டுமே பார்த்ததாய்
பின் ஒரு பனி காலத்தில் சொன்னாய்....

திருமணமான பல மாதங்களுக்கு
ஒற்றை வார்த்தையிலே பதில் சொன்னாய்
பெரும் பயம் கொண்டவளாய்.........

முதல் பிரசவததிற்கு
என்னை பிரிய முடியாது என
கதறி கதறி பிடிவாதம் பிடித்து
பெற்று கொண்டாய் பிள்ளையை
புகுந்த வீட்டிலேயே - சம்பிரதாயம் உடைத்து !

வேலை பளுவிலே நான் தொலைந்து போக
வார்த்து எடுத்தாய் குழந்தைகளை
ஊரார் மெச்ச நீ மட்டுமாய்....

ஆளாக்கி விட்ட பிள்ளைகள்
அங்காங்கே அயல் நாட்டிலே தஞ்சமாக
வெறுமையோடு உன்னை நோக்கி உணர்ந்தேன்
தொலைத்தது உன்னை உம், நாம் வாழ்க்கை உம்.....

நோய் உற்ற போது மருத்துவச்சியாய்
காமமும், காதலும் தேடிய போது மனைவியாய்
அயர்ச்சி அடைந்த போது அழகிய குழந்தையாய்
அறிவு தடுமாறிய போது ஆசிரியையாய்
அன்பை அள்ள தந்த அன்னையாய்
உன் ஓர் உடலுக்குள் தான்
எத்தனை எத்தனை வடிவங்கள்

அத்தி பூததது போல்
ஆண்டுக்கு ஓர் முறை வரும்
பேர பிள்ளைகளை ஓடி பிடித்து
உணவு புகட்டி, கதை சொல்லி
தூங்கி போன உன் தளர்ந்த முகம்
நான் விம்மி நோக்கிய போது
ஏனோ நியாபகம் வந்தது
ஆசையாய் எனை திருடிய
உன் அரும்பு முகம்!!!!

காதலனே............

இன்றோடு நீ உதிர்ந்து
இருபத்தி ஓர் வருடமாம்
நரைத்த என் கேசம் மட்டும்
கலையாமல் சாட்சி சொன்னது !!!

உன் கல்லறை சுவர்களில் கூட
சில கீறல்கள் கண்டேன்
ஆனால்
நீ எழுப்பிய நினைவு சுவரோ
இன்னும் பத்திரமாய் என் இதயத்தில்....

அம்மா, அப்பா, அண்ணன், அக்கா என்று
குடும்ப பாசத்தில் வாழ்ந்த என்னை
பிரித்து எடுத்து காதல் தந்தவனே
நீ "அன்னமாய்" பிறக்க வேண்டியவன்

புயலாய் என்னுள் நுழைந்தவனே
உன் ஓசை அடங்கிய பின் தான் தெரிந்தது
நான் இழந்தது வாழ்க்கை என்று !

ஆசைக்கு ஒன்று; ஆஸ்திக்கு ஒன்று என
தினம் தினம் கனவு வளர்த்தவனே
கனவு உடைத்து நீ மட்டும்
ஓடி போனது ஏனோ???

கண் சாய்த்த கடைசி வினாடியிலுமா தெரியவில்லை
ஓர் பெண்மையின் உயிர் ஓசை
பறித்து போகிறேன் என???

என் மவுன புலம்பல்கள் மீறி
நள்ளிரவில் ஒற்றையாய் ஒளிரும்
விண்மீன் பார்க்கும் போது உணர்கிறேன்
உன்னோடு நான் இல்லாத தவிப்பை
ஆனாலும்......
மொழிகளால் மட்டுமே நீ சேர்த்து வைத்த
உன் தாய்க்கும், தந்தைக்கும்
உன் இடம் நிரப்பி வருகிறேன்
அது வரை காத்திரு....

ம்... ம்... ம்.....
எத்தனை சமாதானம் எனக்குள்
நான் பேசினாலும் - உன்
நினைவு என்னுள் பீறிடும் போது
மனம் வெந்து சாகிறேன்
நீ என் வெட்கம் தின்ற
வினாடிகளை நினைத்து கொண்டே.................

Monday, February 16, 2009

நிலா காலம் அது..........


காலம் நாம் வயதை கேட்கும் முன்
காதலை தேடினோம்
உனது அருகாமை இல் முட் செடிகளை கூட
முல்லை பூவாய் மணக்க செய்தது
கல்லூரி புத்தக அறைகளில்
காதல் காப்பியங்கள் மட்டும் படித்தோம்
அன்பு என்ற தலைப்பில் கட்டுரை எழுதி நீ கேட்க
உன் பெயர் மட்டும் எழுதி தந்தேன்
தூக்கத்திலும் நாம் நம்
வாழ்க்கை கனவுகள் மட்டும் சுமந்தோம்
பின் ஒரு வெயில் கொல்லும்
வெம்மை வேளை இல்
விதி வார்த்தைகளால் விளையாட
கூடல் ஆய் இருந்த நம் வாழ்வு
ஊடல் ஆய் உரு மாறியது
அதன் பின் காதலில்
ஊடல் ஓர் அங்கம் என்றேன்
நீயோ முடிவுரை என்றாய்
இடம் மாறிய இதயத்துக்கு " பதில் என்ன " என்றேன்
இதயம் ஒன்றும் இறைவன் இல்லை "பதில் சொல்ல" என்றாய்
ஒருவகை இல் வாழ்க்கை உம் வாணிபம் தான்
நான் என்னை இழந்து உன்னை பெற்றென்
நீயோ
நம் காதலே விலையாக கேட்டாய்
இப்போது நம்
கனவுகளுக்கு விடை எது கண்மணியே
பின் வருமொரு நாள் இல்
காயம் பட்ட கனவுகள் ஓடு
கல்லறை நோக்கி நான் பயண பட
ஊடல் உடைத்து வெளி வருவாய் நீ
அப்போது
உன் கண்ணீரின்
கனம் தாளாமல் கல்லாறைஇல்
ஒடிந்து விழும் ரோஜா முட்களோடு
நானும் ஊர் நாள்
உயிர்த்து எழுவேன் உனக்காய்
அதுவும்
ஓர் நிலா காலமாய் இருக்கும்.......