Tuesday, July 20, 2010

கப்பலை மறித்த கூனிப்படைகள் - என் கால்பந்தாட்ட அனுபவம்......


உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டன. ஸ்பெயின் கோப்பையை வென்று விட்டது. வலிமை மிக்க பிரேசில், அர்ஜென்டினா போன்ற அணிகள் அரை இறுதிக்கே தகுதி பெறாமல் நாடு போய் சேர்ந்தன. உலக கோப்பைகளில் அதிர்ச்சி தரும் தோல்விகள் சகஜம் என்றாலும் வலிமை மிக்க அணிகள் வீழும் போது பள்ளிப்பருவத்தில் நான் ஆடிய ஒரு கால்பந்தாட்ட போட்டியே நினைவில் வருகிறது........

ஒவ்வொரு கல்விஆண்டின் இறுதியிலும் 'பள்ளி விழாவை(School Day)' ஒட்டி நடக்கும் விளையாட்டு போட்டிகளில் மாணவர்களை ரெட், ப்ளூ, கிரீன், வைட் என நான்கு பிரிவாக பிரித்து இருப்பர். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஜூனியர் எனவும், 9,10 ஆகிய வகுப்புகள் சீனியர் எனவும் 11, 12 ஆகிய வகுப்புகள் சூப்பர் சீனியர் எனவும் பிரிக்கப்பட்டு இருக்கும். நான் சீனியர்-வைட் பிரிவில் இருந்தேன். அப்படி சீனியர் பிரிவில் நடந்த கால்பந்தாட்ட போட்டி தான் இன்றும் மறக்காமல் மனதிற்குள்ளேயே நிற்கிறது.

போட்டிக்கு போகும் முன் எங்கள் பள்ளி கால்பந்தாட்ட அணி,பள்ளி மைதானம், பள்ளி அளவில் நடக்கும் போட்டிக்கு விதிமுறைகளை சொல்லியே ஆக வேண்டும்.

கிறிஸ்துதாஸ் சார் தான் எங்களுக்கு கால்பந்தாட்ட குரு, எங்கள் உடற்பயிற்சி ஆசிரியரும் கூட.பந்தை எப்படி லாவகமாக கடத்த வேண்டும், பெனல்டிக் கிக்கை கோலாக்குவது எப்படி, தடுப்பு ஆட்டங்களின் அவசியம் என்ன? என எல்லாவற்றையும் அருமையாக சொல்லித் தருவார். ஜூனியர் நிலையில் விளையாடும் போது பவுல் செய்தால் பிரம்பாலே முதுகில் போடுவார். எட்டாம் வகுப்பு தாண்டிய பிறகு கண்டிப்பதோடு சரி. ஒழுக்கமும், நேரம் தவறாமையும் தான் அவருக்கு ரொம்ப முக்கியம். நான் அப்போது பள்ளி சீனியர் கால்பந்தாட்ட குழுவில் இருந்தேன். வேடிக்கை என்னவென்றால் பள்ளி அணியில் உள்ள பதிமூன்று(11+2) நபர்களில் பதினோர் பேர் எங்கள் வகுப்பில்(9 A) இருந்தோம்.


எங்கள் பள்ளி மைதானம் அசின் மனசு மாதிரி(!), ஆமாங்க அவளவு சிறிசு :-). சில பயிற்சி ஆட்டங்களில் ஒரு முனையில் இருந்து கோல் கீப்பர் அடித்து விடும் பந்து நேராக எதிர்முனை கோல் போஸ்ட் உள்ளே போய் விடும். இப்படி சிறிய மைதானத்தில் பயிற்சி எடுத்து விட்டு மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்கு போய் மைதானங்களை பார்க்கும் போதே வயறு கலகலத்து விடும். இருப்பினும் மாவட்ட அளவில் ஓரளவு ஆறுதல் வெற்றிகளை பெற்றோம் என்று தான் சொல்ல வேண்டும்.(இந்த மைதான பிரச்சனையினாலே தற்போது பள்ளியில் புட்பால் அணி இல்லை என சென்ற முறை சந்தித்த போது கிறிஸ்துதாஸ் சார் சொன்னார்).

பள்ளி ஆண்டிறுதி போட்டியில் விதிமுறைகள்(!) பிபாவையே முந்தி விடும். நான்கு பிரிவுகள் மட்டும் இருந்ததால், மொத்தம் மூன்றே போட்டிகள் தான். ஒரு அணி இரண்டு முறை மாட்டுமே விளையாடும், லீக் மற்றும் பைனல். போட்டி நேரம் மொத்தம் 45 (20+5+20) நிமிடங்கள்.போட்டி இடை வேளைக்கு முன் ஏதேனும் அணி மூன்று கோல்களுக்கு மேல் வாங்கி இருந்தால் தோத்ததாக ஒப்பு கொள்ள சொல்லி போட்டியையே முடித்து விடுவார்கள். லீக் போட்டிகள் மாலையிலும் பைனல் மறுநாள் காலையிலும் நடக்கும். சரி இனி போட்டிக்கு செல்வோம்.

பள்ளி அணிக்காக ஆடும் நான், சுபாஷ், வைசிலின் மூன்று பெரும் வைட் அணியில் இருந்தோம். இதில் நானும், சுபாசும் பின்தடுப்பு ஆட்டக்காரர்கள்(Backers), வைசிலினோ இடை நிலை(Middle) ஆட்டக்காரர். எங்கள் மூன்று பேரை தவிர்த்து அணியில் இருந்தவர்களின் வகைகள்.


௧. பள்ளி அணியில் இடம் கிடைக்காமல் பயிற்சி ஆட்டத்தில் மட்டும் ஆடுபவர்கள்.
௨. கூடைபந்து\கைப்பந்து விளையாட்டில் அனுபவம் உள்ளவர்கள்.
௩. கால்பந்து போட்டியில் விளையாட ஆசைபடுபவர்கள்\ டிவியில் ரசிப்பவர்கள்.
௪. ஆள் இல்லாமல் அணியில் பிடித்து போட்டவர்கள்.

இப்படி கட்டுகோப்பாக(!) தான் இருந்தது எங்கள் அணி.

லீக் போட்டியிலேயே நாங்கள் கடுமையாக சோதிக்கப்பட்டோம். எங்களை எதிர்த்து ஆடிய அணியில்(ப்ளூ பிரிவு ) ஒரே ஒரு நபர் மட்டுமே பள்ளி அணியில் இருந்தாலும் மற்ற வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டவர்கள். நான்,விசிலின்,சுபாஷ்,சீனு -வும் தான் லீக் போட்டியில் முன்களத்தில் நின்று ஆடினோம் இதில் சீனு கூடைபந்து ஆட்டக்காரர் ஆனதால் தலைக்கு வரும் பந்தை கையால் பிடித்து தன் சொந்த விளையாட்டின் பக்தியை காட்டினார். ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியாமல் அவரை கோலி(Goal Keeper) ஆக்கி அது வரை கோலியாய் இருந்த கைப்பந்து ஆட்டக்காரரை முன்னால் கொண்டு வந்தோம், இவர் சீனு அளவிருக்கு பக்தியை காட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ம்ம். ....... போராடி 1-0 என்ற அளவில் லீக்கை ஜெய்த்தோம். . பள்ளி அணியின் ஏழு ஸ்டார் ப்ளேயர்களுடன் கிரீன் அணியை துவம்சம் செய்து சிங்கம் போல சிலிர்த்து பைனலுக்கு தயாராய் இருந்தது ரெட்.

நாளை காலை ரெட்டை தான் சந்திக்க போகிறோம் என எண்ணிய போது இரவு தூக்கமே வரவில்லை. போதாததற்கு ரெட்- இல் இருந்த நண்பர்கள் "விளையாட்டின் பாதி நேரமாவது தாங்குவீர்களா, பேசாமல் தோல்வியை விளையாடாமல் ஒப்பு கொள்ளுங்கள்" என பயமுறுத்தி சென்றதே என்னை துரத்தி கொண்டிருந்தது . மெல்ல கண் அயரும் போது ஒன்றே ஒன்று மட்டும் மனசுக்குள் ஓடியது ' எப்படியும் தோற்க தான் போகிறோம் ஆனால் கேவலமாக தோற்க கூடாது'.

காலை மணி 8:30 . இன்றைய கிரிக்கெட் ஆட்டக்காரர்களை போல் தோளில் கைபோட்டு உற்சாக படுத்த வார்த்தைகள் எங்களிடம் இல்லை. பலிகடா கணக்காக அனுபமற்ற ஆட்டக்காரர்களுடன் நான் நின்று கொண்டிருந்ததை 'முதல் பாதி வரைக்குமாவது தாங்குமா'' என்பது போல் பரிதாபமாக பார்த்தார் மேட்ச் ரெபரி கிறிஸ்துதாஸ் சார். எதிரே நின்று கை குலுக்கிய ரெட் டீம் நண்பர்கள் சிரிப்பு ஒரு புறம் வேதனையை தந்தாலும் வீரியத்தை வளர்த்தது. நிற்க...... இங்கே வீரியம் என்பது குறைந்த கோல் வாங்கி தோற்பது. ஆச்சரியங்கள் காத்திருந்தது.........


ஆச்சரியம் 1
டாஸை ஜெய்த்தோம். எங்கள் எல்லோர் முகத்திலும் அபூர்வமான புன்னகை பரவியது. மேட்ச் தான் ஜெய்க்க முடியாது, டாசாவது ஜெய்த்தோமே என.

ஆச்சரியம் 2
ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் வாங்கவே இல்லை. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் முதல் பாதியில் நேர்த்தியாக ஆடினர் ரெட் அணியினர். நாங்களோ இழப்பதற்கு தான் ஒன்றும் இல்லையே என காட்டுத்தனமாக ஆடினோம். எந்த பவுலும் செய்யவில்லை என்றாலும் அனுபவ குறைவான வீரர்களுடன் ஆடியதால் ப்ரோபசனலிசம் குறைவாக இருந்தது. எதிரணியின் யார் காலில் பந்து இருந்தாலும் அவரை சுற்றினோம்.பந்தை கடத்தவே விடாமல் தடுத்தோம்.அந்த இருபது நிமிடமும் ஓடி கொண்டே இருந்தோம். எங்கள் காலில் கிடைக்கும் பந்து ஊதாரித்தனமாக உதைக்கப்பட்டு எங்கெங்கோ தெறித்தது.....

ஆச்சரியம் 3
சமநிலையில் ஆட்டம். இடைவேளையில் நம்பிக்கை வந்தது. என்ன நம்பிக்கை ?? குறைவான கோலில் தான் தோற்க போகிறோம் என்று. ரெட் அணி வீரர்களை பார்த்தோம் உண்மையில் கொஞ்சம் சோர்ந்து இருந்தார்கள்.அவர்களின் முகங்களில் பதட்டம் தென்பட ஆரம்பித்தது. இடைவேளையில் எங்கள் அணிக்குள் GAME PLAN பற்றி பேசி கொண்டோம் அதாங்க 'குறைவான கோலில் தோற்பது'.

இந்த முறை மைதானம் முழுவதும் புழுதி பறந்தது. ரெட் அணியினர் ஆக்ரோசம் காட்ட தொடங்கினர். நாங்களும் விடவே இல்லை மாறி மாறி பவுல் வாங்கினோம். முன்னால்(Forward) ஆடிகொண்டிருந்த நாங்கள் மூவரும் பின் தடுப்பு ஆட்டக்காரர்கள் ஆனோம். கோல் போஸ்டை நோக்கி குறிவைக்க கூட அவகாசம் கொடுக்காமல் வழி மறித்தோம். எதிர் முனையில் ரெட் இன் கோலி கொட்டாவி மட்டும் விடாமல் நின்று கொண்டிருந்தான் அப்படி ஒரு தடுப்பு ஆட்டம். ஆட்டம் முடிந்தது 0-0 என.

ஆச்சரியம் 4
விளையாட்டு கூடுதல் நேரத்துக்கு சென்றது. அன்பர்களே நம்பினால் நம்புங்கள் இப்போதும் நாங்கள் தோல்வியை எதிர்பார்த்தே விளையாடி கொண்டிருந்தோம். போராடி தோல்வி என்ற பட்டத்தை மட்டுமே சூட்டி கொள்ள விரும்பினோம். அந்த ஐந்து நிமிடங்களும் அனல் பறந்தது. சோர்வடைந்த நிலையில் விளையாடி கொண்டிருந்த ரெட் அணி மற்றும் எங்கள் பள்ளி அணியின் காப்டன் ஜோஷி கடைசியில் ஆக்ரோசம் காட்டவே இல்லை. மைதானத்தின் பாதிக்கு குறைவான தூரத்தில் வெறுமனே நின்று கொண்டிருந்தான். எதிர்பாராமல் ஒரு பந்து அவனது காலில் சிக்க தூக்கி அடித்தது மயிரிழையில் கோல் கம்பில் தட்டி தெறித்தது. அத்தோடு விசிலும் ஊதப்பட்டு பெனல்டிக் ஷூட்டுகு சென்றது விளையாட்டு.

ஆச்சரியம் 5
பெனல்டிக் வரை வந்த பிறகும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை மிக முக்கியமான காரணம் எதிரணியின் கோலி பிரவீன். அவன் தான் எங்கள் பள்ளி அணிக்கும் கோல் கீப்பர். பலவீனமான எங்கள் கால்களில் இருந்து வரும் பந்தை தடுக்கும் ஆற்றல் பிரவீனுக்கு உண்டு.. ம்ம். சீனுவை கோல் கீப்பர் பதவியில் இருந்து கழட்டி விட்டு நான் எங்கள் அணியின் கோல் கீப்பர் ஆனேன். டாஸ் சுண்டியத்தில் திருப்பியும் ஜெய்தோம்.

நான் முதல் வாய்ப்புக்காக அடித்தேன். பதட்டத்தில் அடித்ததில் பந்து கோல்போஸ்ட் மேலே எகிறியது. அவர்கள் தரப்பில் பிரவீன் அடித்தது கோலானது.(௦0-1)
அடுத்து எங்களில் இருந்து வைசிலின் அவர்களில் ஜோஷி . இருவருமே கோலாக்கினார். (1-2)
அடுத்து இங்கே சுபாஷ் அங்கே ஒரு ஸ்டார் பிளேயர். இருவருமே கோலக்கினர். (2-3)
அடுத்து எங்களுக்கு சீனு அங்கே ஒரு ஸ்டார் பிளேயர். சீனு அடித்தது கோலானது. எதிராளி அடித்தது என் தலைக்கு சரியாக வர எகிறி பிடித்தேன்.(3-3)
அடுத்தது எங்கள் அணியில் ஒரு பயிற்சி ஆட்டக்காரரும் அங்கே ஒரு ஸ்டார்
பிளேய
ரும். இருவருமே சம்மந்தம் இல்லாமல் அடித்து வெளியே தள்ளினர்(3-3)

விளையாட்டு உச்ச கட்டத்தை எட்டியது..... சடன் டெத்

சடன் டெத்
என் ஆச்சரியங்கள் என்னை விட்டு தொலைந்து போய் இருந்தன.... போரடி
யா
யிற்று .... வைசிலினும் , சுபாசும் நிச்சயம் கோலடிப்பார்கள். விளையாட்டின் முடிவு எங்கள் அணி கோலி கையில் தான் இருக்கிறது.
கோலி யார்? நான்...
கூடாது... இனி தோற்கவே கூடாது என மனத்திற்குள்ளே சபதம்
ட்
டு, இரு கைகளையும் மண்ணில்
உரசி உரமேற்றி தயாரானேன்.
அதற்க்கு முன் சடன் டெத் பற்றி... இரு அணிகளுக்குமே ஒரே ஒரு வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்படும். அதில் தவறவிடும் அணி காலி.

இந்த முறை எங்கள் அணியின் முதல் வாய்ப்பு சுபாசிடம், அங்கோ ஜோஷி. அத்தனை ஆக்ரோசமாக சுபாஷ் முதல் கோலை அடித்தான். நான் ஜோசியின் கோலை தடுக்கும் பட்சத்தில் நாங்கள் வெற்றி... ஜோஷியின் பெனல்டிக் சாட்டுகளை பார்த்திருக்கிறேன் பொதுவாக கோலியின் இடது பக்கத்தில் தான் அடிப்பான். மெதுவாக கொஞ்சம் இடது பக்கம் நீங்க..... ஜோஷி வலது பக்கத்தில் அடிக்க..... கோல்.

இரண்டாவது இங்கே வைசிலின் அங்கே ஸ்டார் பிளேயர். வைசிலின் எங்கள் பக்கம் எந்த சிரமமும் இல்லாமல் கோலை அடித்தான். அவர்கள் பக்கத்தில் ஸ்டார் பிளேயர் அடிக்க இடது புறம் வந்த பந்தை நான் எகிறி குதித்து தடுக்க முற்பட கையில் தட்டி கோல்.நான் கீழே விழுந்ததில் என் இடது மூட்டிற்கு கீழ் தோல் பிய்ந்து ரத்தம் கொட்ட துவங்கியது. அதை துடைக்கவோ பார்க்கவோ அவகாசம் இல்லை நான் தான் அடுத்த ஆள்.

மூன்றாவது எங்கள் அணிக்காக நான், அங்கோ பிரவீன். இந்த முறை நான் தவறு செய்யவில்லை. பிரவீனை யோசிக்க கூட விடாமல் கால் வலியோடு அடித்தேன் கோல். இப்போது என்னால் காலை மடக்க முடியவில்லை வலி பிராண்டியது. நண்பர்கள் கோலியை மாற்றி கொள்வோம் என சொன்னார்கள். நானோ 'தோற்றால் நானே பொறுப்பு எடுத்து கொள்கிறேன் மாற வேண்டாம்' என பிரவீனை எதிர் கொள்ள தயாரானேன். என் இடது மூட்டில் ரத்தம் வருவதை பிரவீன் கவனித்ததை நானும் கவனித்தேன். மெதுவாக இடது பக்கம் கொஞ்சம் நீங்கி நின்று கொண்டேன். பிரவீன் அடித்தான்........ அவன் துரதிஷ்டம் பந்து நேராக என்னை நோக்கி வே
மாய் உருண்டு வர நான் அலட்சியமாய் காலாலையே உதைத்து ஆத்திரம் பீறிட கத்தினேன். அதன் பின் நிகழ்ந்தது அனைத்தும் கண்ணீர் சொரியும் நினைவுகள். எங்கள் கொண்டாட்டம் அடங்க வெகு நேரம் ஆனது...


என் காலில் பட்ட காயத்திற்கு தண்ணீர் விட்டு கழுவி கொண்டிருந்தேன். எப்போதுமே பாராட்டாத கிறிஸ்த்துதாஸ் சார் அருகில் வந்து முதுகை தட்டி "வெரி குட்' சொல்லி போனார்.

சாத்தியமில்லாத இலக்குகள் என்று எதுவும் இல்லை என்பதை முதல் முதலாக கற்று தந்த நாள் அது