Wednesday, February 24, 2010

அஜித்குமார் என்ற ஆண்மகன்

இந்த பதிவை எழுதுவதால், நான் அஜித்தின் தீவிர ரசிகன் என்றோ, அவருடைய மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினன் என்றோ தவறாக எண்ணி விட வேண்டாம். அஜித்தின் ஒரு சில திரைப்படங்களை மட்டும் பார்த்திருக்கிறேன், அதுவும் நன்றாக இருக்கிறது என நண்பர்கள் சொன்னால் மட்டும்.... இருப்பினும் கடந்த சில வாரங்களாக அஜித்தை மையம் கொண்டு சுழலும் சர்ச்சைகளே இந்த பதிவினை எழுத தூண்டியது...

'தமிழ்நாடு மன்னராட்சி காலத்தில் தான் இருக்கிறதா ?' என சில நேரம் தோன்றி விடுகிறது. ஏனென்றால் மன்னராட்சி காலத்தில் தான் பெரும்பாலும் கருத்துரிமை பறிக்கப்பட்டிருக்கும்.. அரசனை சுற்றி இருக்கும் மங்குணி அமைச்சர்கள் எடுபிடியாகவே இருப்பார்கள்.... அரசனுக்கு அசதி ஏற்ப்பட்டால் அதை போக்க அரசவை கவிஞர்கள் வேறு....இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா....( இந்த எக்ஸட்ரா எக்ஸட்ரா-வில் அந்தபுரம் உண்டா என கேட்காதீர்கள் )

இந்த 2010 ஆண்டில் 700 கோடி மக்கள் தொகையை தாண்டி உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது...இன்றும் தமிழகத்தில் தனது பதவியை தக்க வைத்து கொள்ள அரசர் காலத்தை விட மோசமான சுயநல அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது... தன் இன மக்கள் சுமார் 10 மைல்களுக்கு அப்பால் கொல்லப்பட்ட வேளையில் அறிக்கை மட்டுமே விட்டு விட்டு குளுகுளு இடங்களில் ஓய்வும், மாலை நேரங்களில் சினிமா பதுமைகளின் நடனமும் மட்டுமே இந்த அதிகார மையங்களுக்கு தேவைப்பட்டது..இனத்திற்காக தங்களும் ஏதோ செய்தோம் என்று காட்ட உண்ணாவிரத நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன....

ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி இருக்க வேண்டும்??? அதுவும் வயதை கடந்த ஒரு முதியவரிடம் எப்படிப்பட்ட பக்குவத்தை நாம் எதிர்பார்ப்போம்..இந்த நாட்டின் எல்லா விருதுகளும், புகழ் மாலைகளும் தனக்கு அப்பாற்பட்டது என்று எண்ணும் குறைந்த பட்ச தகுதி.... ஆனால் தமிழகத்தை ஆளுபவர்களுக்கோ மாதத்திற்கு மூன்று விருதுகள் கிடைக்கவில்லை என்றால் தானாகவே நடுக்கம் வந்து விடுகிறது போலும்....இதை தவிர்த்து எல்லோரும் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நப்பாசை வேறு...

இப்படி சினிமா உலகம் நடத்திய பாராட்டு விழாவில் தான் ஒரே ஒரு குரல் வெளிப்படையாக தன்னுடைய கருத்தினை தமிழகத்தின் முதல் குடிமகனுக்கு முன்னால் பதிவு செய்தது. அதுவும் அவருக்கு எதிராக அல்ல, சினிமா முதலாளிகளுக்கு எதிராக... அந்த குரலுக்கு சொந்தகாரர் திரைப்பட நடிகர் அஜித்.. "பெரும்பாலான விழாக்களுக்கு தங்கள் விருப்பம் இல்லாமல் மிரட்டியே அழைக்கப்படுகிறோம், அரசியல்வாதிகளை பொது பிரச்சச்சனைகளை பார்த்து கொள்ள சொல்லுங்கள், நாங்கள் எங்கள் தொழிலை மட்டும் பார்க்கிறோம்" என்பதே அவருடைய பேச்சின் சாராம்சம்..


மாற்று கருத்து உடையவராக இருந்தாலும், அந்த நபருக்கான கருத்து உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பெரியார்..... பெரியாரின் பெயரை சொல்லி பதவிக்கு வந்த இந்த போலி பகுத்தறிவாளர்களுகோ பயம் ஏற்பட்டு விட்டது.சம்மந்தப்படவர்களை என்னவென்று விசாரித்து நடந்து கொண்டிருக்கும் 'மிரட்டல்' பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலாமல் 'வேறு ஒருவரையே சொன்னாலும், தனக்கு முன் எப்படி சொல்லலாம்' என்ற பாசிச சிந்தனையுடன் பிரச்னையை அணைத்து விட பார்க்காமல் தொடர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.... அதன் தொடர்ச்சியே ஜாகுவார் தங்கம் முதல் திருமா வரை விடும் அறிக்கைகள்....

இது போதாது என்று இனம் மற்றும் ஜாதி பிரச்சனைகளை கொண்டு அஜித்தின் மேல் சேறு வாரி இறைக்கிறார்கள், போதாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறது பெப்சி. "மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, வேண்டுமென்றால் நடிப்பதை விட்டு விடுகிறேன்" என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார் அல்டிமேட் ஸ்டார்... அது தான் அஜித். இந்த கலககுரல், இந்த கம்பீரம் தான் இன்று என்னை போன்ற ரசிகன் அல்லாத சினிமா பார்வையாளன் மனதில் அஜித்தை நிரந்தர இடம் பெற செய்திருக்கிறது..

விழா அரங்கிலையே எழுந்து நின்று கைதட்டி தனது பேராதரவை தெரிவித்தார் ரஜினி. 1996 ஆண்டு தேர்தலுக்கு முன்னிருந்தே அவர் என்ன பேசினாலும் சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க முடிவதில்லை.... சூழ்நிலைகளின் கைதி போல் கொந்தளிப்பான மனநிலையில் இருந்த ரஜினி தான் பேச முடியாததை அஜித் பேசியதால் விழா மேடையிலேயே எழுந்து கைதட்டினார்..
ஆனால் அவருக்கும் ஒரு கண்டனத்தை தெரிவித்தது பெப்சி..நடிகர்களுக்கு சமூக அக்கறை வேண்டாமா ? எனபது மட்டுமே எதிர் கோஷ்டியினர் கேட்கும் ஒரே கேள்வி... சமுக அக்கறை என்பது மேடையில் மட்டுமே வீர வசனம் பேசி கைதட்டல் வாங்கி விடுவது என இந்த அறிவிலிகள் நினைத்திருக்கிறார்கள் போலும்..



தொழில் முறையில் சக போட்டியாளராக இருந்தாலும் விஜய் தனது ஆதரவை அஜித்துக்கு தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.அறிக்கை விடாமல் இருந்தாலும் சக நடிகர்கள் பலர் தங்களுடைய ஆதரவை அஜித்துக்கு தெரிவித்து உள்ளனர்... நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும் மொழி, இன பிரச்னை அல்ல.... தன்மான பிரச்சனை... பெப்சிக்கு தம் அமைப்புக்கு எதிராக ஒரு முன்னணி நடிகர் பேசி விட்டாரே என்று.......... முதல்வருக்கோ தன் பாராட்டு விழாவில் ஒரு எதிர் குரல் கேட்டு விட்டதே என்று..

அஜித் கிளப்பிய பொறி இந்த அதிகார மையங்கள் திருந்தி கொள்ள ஒரு வாய்ப்பாக அமையட்டும்... இல்லையேல் காலம் இவர்களுக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும்...

புயலாக வந்து எல்லோருடைய மவுனங்களையும் உடைத்த நடிகர் அஜித்துக்கு ஒரு ராயல் சல்யுட்