Wednesday, February 29, 2012

வீட்டுக் கோழிகள்


கடந்த கோடையில் பண்டிகை ஒன்றிற்காக ஊருக்கு சென்றிருந்தேன். மீசை முளைக்கத் துவங்கிய காலகட்டத்தில் இருந்தே பண்டிகைகளின் முந்தைய நாளில் இளவட்டங்கள் சேர்ந்து ஊரின் ஒதுக்குபுறமாக ஏதேனும் சமைத்து, சாப்பிட்டு, கதை பேசி, மகிழ்ந்து, கலைந்திருக்கிறோம். இந்தத் தடவை என்ன செய்யலாம் என யோசித்து நாட்டுக் கோழியும், மரிச்சினி(மரவள்ளி) கிழங்கும் சாப்பிடலாமே என எனது ஆசையை தெரிவித்தேன்.




நமட்டு சிரிப்புடன் பங்காளி ஒருவன் "இங்க களவாணக்கு கூட கோழி கிடச்சேல , உனக்கு வெலைக்கு வாங்கக்கா கெடச்சம்"
என்றான்.
"சீசன் நேரம் ஆனதாலஇப்ப கடையில கூட கிடச்சாது மக்கா" இன்னொரு நண்பன்.
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்பதை விட ஊரில் யாருமே தற்போது வீட்டுக் கோழியே வளர்ப்பதில்லை என்ற செய்தியே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்தது.

நகரம் உலகமயமாக்கல் என்ற தனது அகோர நாக்கைக் கொண்டு கிராமங்களைத் தன்பக்கமாக இழுத்து வருகிறது... கிராமம் அதன் தொன்மையையும், தனித்தன்மையையும் தன்னை அறியாமல் இழந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.

உணர்ச்சிவசப்படாமல் யோசித்து பார்த்த போது உண்மை புலனாகத் துவங்கியது.கோழியை வளர்த்தெடுப்பதற்கோ, வாங்குவதற்கோ, விற்பதற்கோ யாருக்குமே நேரமில்லை. பத்து வருடங்களுக்கு முன் ஊரில் ஒரே ஒரு பிராயிலர்கடை இருந்தது போய் இன்று ஐந்தாறு கடைகள் வந்து விட்டது. ஊரில் உள்ள இளவட்டங்கள் அனைத்தும் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு புலம் பெயர்ந்து விட... முதியவர்களின் விடுதி போல் பகல் நேரங்களில் கிராமங்கள் காட்சியளிக்கின்றது.



பால்யத்தில் எங்கள் ஊரில் கோழி வளர்க்காத வீடுகளே பார்க்க முடியாது. சைக்கிள் டயரை உருட்டியவாறு ஊரை ஒரு சுற்று சுற்றி வந்தால் ஒரு கோழி குஞ்சாவது காலில் மிதிபடும். 'இது **** வீட்ல உள்ள கோழியாக்கும்' என ஒவ்வொரு வீட்டில் வளரும் கோழியும் அவ்வீட்டின் ஒரு உறுப்பினராகவே ஊரை வலம்வந்தது.

சென்னையில் நான் தங்கியிருந்த மேன்சன் சமையலறையை விட பெரிதான அளவில் எங்கள் வீட்டில் கோழி கூடுஒன்று இருந்தது. பக்கத்தில் இருந்த சிறு நகரத்தில் அப்பா ஜவுளிக்கடை வைத்திருந்ததால் அம்மாவும், அப்பாவும் காலையிலே கிளம்பி விடுவார்கள். விடுமுறை நாட்களில் வேளாவேளை கோழிக்கு தவிடு வைப்பது, கோழி முட்டை இட்டிருந்தால் எடுத்து பத்திரமாக அரிசி பானைக்குள் வைப்பது, கோழிகளின் எண்ணிக்கையை சரிபார்த்து கோழிக் கூட்டைப் பூட்டுவது என எல்லா வேலைகளும் எனக்கே தரப்பட்டு இருந்தது.

சிறுவயதில் அம்மாவிடமிருந்து அதிகபடியான அடியை கோழிக் கூட்டை மூடவில்லை என்பதற்காகவே வாங்கி இருப்பேன். கோழிக் கூட்டை ஒழுங்காக மூடி இருந்தேன் என்றாலே அன்றைய வேலைகள் அனைத்தையும் சரியாக செய்திருக்கிறேன் என அர்த்தம்.

ஊரில் நரிகள் நடமாட்டம் அதிகமிருந்த காலகட்டம் அது. சரியாகக் கதவு சாத்தப்படாத கோழிக்கூடுகளை கன்னம் வைத்து நடு இரவில் ஒன்றிரெண்டை அப்பிக் கொண்டு போய் விடும். நரிகள் தவிர வெளியூர் நாய்கள், காட்டுப் பூனைகளுக்கும் வீட்டுக் கோழிகள் இலக்காவது உண்டு. குடும்ப திருமணங்களுக்காக வெளியூர் செல்லும் போது பக்கத்து வீடு மாமியிடம் கோழிக் கூட்டைப் பூட்ட அம்மா சொல்லிப் போவாள். ஆனாலும் "இண்ணைக்கு மைனி கோழி கூட்ட பூட்டிசின்மோ என்னமோ" - என அந்தி சாய்ந்தால் புலம்புவதை கேட்க முடியும்.



நரிகள், காட்டு நாய்கள், பூனைகள் இவை தவிர்த்து கோழிகளை பிடிக்க அலையும் மனித நரிகளும் உண்டு. மனித நரிகள் - ஆம், ஊரில் சுற்றி திரியும் இளந்தாரிகள். ஊர் எல்லையில் இவர்களுக்கு கிடைக்கும் வெதுவெதுப்பான சாராயத்திற்கு எதேனும் வீட்டுக் கோழியே துணையாகும்.

காட்டு நரிகள் கோழியை பிடித்துச் சென்றதா, இல்லை மனித நரிகள் பிடித்ததா என எளிதாக அடையாளப்படுத்தி விடலாம். காட்டு நரிகள் கோழிகளைப் பிடிக்கும் போது ஏறக்குறைய ஊர் எல்லை வரை கோழியின் இறகுகளை பார்க்கலாம். இன்னும் சற்று தள்ளிச் சென்றால் முழுதாய்த் தின்னாமல் சிதறிய கோழி பாகங்களையும் பார்க்கலாம். நரிகள் கோழிக் கூட்டுக்குள் சென்று கோழியைப் பிடிக்க முற்படும் போது கோழிகள் வெளிப்படுத்தும் சத்தம் மிகவும் அகோரமாய் இருக்கும். அப்போது ஊரில் ஏதேனும் பெரிசுகள் விழித்திருந்தால் அப்புறம் நரிக்காக காத்திருக்கும் துணைக்கு வேறு ஆள் பார்க்க வேண்டியது தான்.

இளந்தாரிகள் கோழி பிடிக்கும் விதமே அலாதியானது. ஏதேனும் ஒரு வீட்டின் கூட்டைக் கன்னம் வைத்து அவர்கள் இறங்கும் போது கண்டிப்பாக ஒரு நீள டார்ச்சும், தண்ணீரில் நனைத்த ஒரு கோணிப்பையும் இருக்கும். டார்ச்சை கொண்டு ஏதேனும் ஒரு கோழியின் கண்களில் அடித்துக்கொண்டே கோணிப்பையை கொண்டு கோழியை மூடும் போது ஒரு சத்தம் வராது. கடந்த பத்தியில் சொன்ன எந்த தடயங்களும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாக மனித நரிகளின் வேலையாகத் தான் இருக்கும்.அப்புறம் என்ன?!?!?! முகம் தெரியாத அந்த இளந்தாரிகளுக்கு, அவர்கள் அப்பாவுக்கு, அவர்கள் அம்மாவுக்கு என இரண்டு நாட்கள் முழுக்க வசையாகவும், சாபமாகவும் கோழியைப் பறிகொடுத்தோர் வீட்டில் இருந்து கிடைக்கும்.

இப்போதெல்லாம் பண்டிகை காலம் என்றாலே கறிக் கோழிக் கடைகளில் காத்திருக்கும் கூட்டத்தை அந்தக் காலத்தில் பார்க்கவே முடியாது. கிறிஸ்மஸ், புத்தாண்டு, ஈஸ்டர் என எல்லா பண்டிகைகளுக்கும் அடித்து புசிப்பதற்க்காகவே வீட்டில் சேவல் கோழிகள் வளர்க்கப்படும். விருந்தினர்கள் யாராவது வந்தால் வீட்டில் இருக்கும் பெரிய சேவல் கோழிகளே முதல் இலக்கு. எனது அம்மாவின் அம்மா வீட்டில் மிகப்பெரிய கோழிக் கூடு ஒன்று இருந்தது... அது நிறைய கோழிகளும். பண்டிகை நேரத்தில் தனது மகள்களுக்கு படி(பண்டிகை கால சீதனம்) கொடுக்க வரும் போது ஒவ்வொரு கோழியாக எல்லா மகள்களுக்கும் பரிசளிப்பாள்.

வீட்டுக் கோழி வளர்ப்பில் முக்கியமான காலகட்டம் நோய்க் கால பராமரிப்பு. ஏதேனும் கோழிக்கு நோய் தொற்றி விட்டால் அதைத் தனியாகப் பிரித்து வேறு ஒரு கூடைக்குள் அடைத்து மருத்துவம் பார்ப்பார்கள். மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக் கோழிகளுக்கு நோய்த் தடுப்பு ஊசி இட்டால் அது ஆரோக்கியமாக வளரும். வாரம் ஒரு முறை சனிக்கிழமைகளில் ஊரில் இருந்து சுமார் எட்டு மைல்களுக்கு அப்பால் இருந்த கால்நடை மருத்துவமனையில் தான் ஊசி இட வேண்டும். வீட்டில் மூத்தவன் என்ற முறையில் நான் தான் கோழிகளைக் கொண்டு செல்ல வேண்டும்.


வேறு யாராவது நண்பர்கள் வருகிறார்களா என விசாரித்துக் காலையிலே கிளம்பி விடுவோம். வீட்டில் ஒவ்வொரு கோழியின் கால்களையும் தனியாக கட்டி ஒரு பெரிய கடவத்தில் வைத்து தருவார்கள்.கோழிக்கு மூச்சு திணறல் வந்துவிட கூடாது என்பதற்காக அதன் தலைகள் வெளியில் பார்த்து இருக்கும் படி செய்ய வேண்டும். சைக்கிளில் கடவத்தை வைத்து கட்டிச் சென்றாலும் ஒவ்வொரு கணமும் பின்னால் கோழி பத்திரமாக இருக்கிறதா என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும். கோழியின் கால்கள் தற்செயலாக அவிழ்ந்து அது ஓடி விடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு... மூச்சுத் திணறி மரித்துப் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு.. இரண்டில் எது நடந்தாலும் அன்று வீட்டுக்கு செல்ல முடியாது என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.

காலையில் ஒன்பது மணிக்கு முன்பே நாங்கள் கால்நடை மருத்துவமனைக்கு வந்தாலும் 'மாட்டு டாக்டர்' அவர் நேரத்திற்குத் தான் வருவார். அதுவரைக்கும் வரிசையில் கோழிகளோடு காத்திருப்போம். கோழிகளோ மிரட்சியோடு எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்.

சுமார் பத்தரை, பதினொன்றுக்கு வரும் டாக்டர் வரிசையாய் இருக்கும் எங்களை அலட்சியத்தோடு ஒரு பார்வை பார்த்துக் கொண்டு கட்டிடத்தைத் திறப்பார். பின் உடைகளை மாற்றிக் கொண்டு முதலில் பசு, ஆடு போன்றவைகளை கவனித்து விட்டு (ஆடு, மாடு கொண்டு வருபவர்கள் அவரை 'கவனிப்பார்கள்') கடைசியாய் எங்கள் அருகில் வருவார்...

அன்றைய நாளின் மிகப்பெரிய சவாலே அப்போது தான் எங்கள் முன் காத்திருக்கும். நாங்கள் கோழியை எடுத்து அவரிடம் நீட்டும் போது இடது கையால் அதன் சிறகை பிடித்து தூக்கி ஐந்தே வினாடிகளில் ஊசியை போட்டு விடுவார். ஒரு தடவை மருந்து நிரப்பட்ட ஊசியை வைத்து சுமார் ஐந்து கோழிகளுக்குப் போடுவதால் அவரிடம் இருந்து ஊசி போட்ட கோழியை வாங்கி வைத்து அடுத்த கோழியை எடுத்து அவரிடம் நீட்டும் முன் அவர் வாயில் இருந்து வசவாக வரும்.

கோழியை வாங்கி வைத்து அடுத்த கோழியை நீட்டும் அந்தச் சில நொடிப் பொழுதைக் கூட அவரால் தாங்க முடியாது. நாம் கோழியைக் கடவத்தில் வைத்து அடுத்த கோழியைக் கொடுக்கும் இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு கோழி பயத்தில் கடவத்தில் இருந்து துள்ளிக் குதித்து தத்தி தத்தி ஓடுவதும் உண்டு. ஓடும் கோழியை பிடிக்கப் போனால் அடுத்த கோழிக்கு ஊசி போட முடியாது, போடவும் மாட்டார்.

இந்த மாட்டு டாக்டருடைய அக்கப்போர்களை சமாளிப்பதற்க்காகவே நாங்கள் நண்பர்கள் சில நேரம் ஒவ்வொருகடவமாக பிரிப்போம். முதலில் எனது கடவத்தை பிரிக்கும் போது நண்பன் ஒருவன் கோழியை ஊசி போடுவதற்காக பிடித்து கொடுப்பான் பின் அவனுடைய கடவத்தை பிரிக்கும் போது நான் கோழியை பிடித்து கொடுப்பேன். இருந்தாலும் கோழியை வாங்கி, வைக்கும் இடைவேளையில் விரையமாகும் அந்த சில நொடிகளுக்காகவும் எங்களுக்கு வசவு கிடைக்கும்.

அலுவலகத்தில் புராஜெக்ட் டெட்லைன், இன்றே கடைசி என மேலாளரால் அறிவிக்கப்படும் இந்நாட்களில் அன்று கோழிக்கு ஊசி போடும் போது மாட்டு டாக்டர் முன் கொள்ளும் பதட்டத்தை, இன்று நான் கொள்வதில்லை......

6 comments:

  1. மறைந்து போனது நாட்டு கோழி மட்டுமல்ல. அதைப்பற்றிய செய்தியை படிப்போரும் போல.
    கடந்த எட்டு நாளாய் ஒரு பின்னூட்டமும் வரவில்லையே.

    ReplyDelete
  2. Nice reminiscence. Which are you belongs to in KK Dist?

    ReplyDelete
  3. Sorry that was a typo. Which area you belongs to in KK dist?

    ReplyDelete
  4. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சேக்காளி, வாய்மை..
    எனக்கு பள்ளியாடி (மார்த்தாண்டம் அருகில்) நண்பரே..

    ReplyDelete
  5. "இண்ணைக்கு மைனி கோழி கூட்ட பூட்டிசின்மோ என்னமோ" செம செம...உங்கள் கட்டுரைககளிலே எனக்கு மிகவும் பிடித்தது.... அருமையான பதிவு.கோழிகளை அம்மாக்கள் கொல்லும் அழகை(கொடூரத்தை) விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறன்!!! இன்றைக்கு நாட்டு கோழி மட்டுமல்ல, மரிச்சினி கிழங்கும் ரப்பரின் வருகையால் காணாமல் போய் கொண்டிருக்கிறது......

    ReplyDelete
  6. very nice story...nijama ippo enga veetla kozhi valakkala...

    ReplyDelete