Saturday, October 28, 2017

இரணியல் பாண்டியர் கோட்டை

1956, மலையாளி ஆதிக்கத்தை உடைத்து தாய் தமிழகத்துடன் தென் திருவாங்கூர்(கன்னியாக்குமரி) இணைவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு, பாராளுமன்றத்தில் குமரி இணைப்பு தொடர்பாக ஒரு அனல் பறக்கும் விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. விவாதத்தில் குறுக்கிட்ட, ஸ்ரீ அச்சுதன் என்ற மலையாள எம்பி "குமரி தமிழகத்துடன் இணையும் போது அங்கிருக்கும் மலையாளிகளின் நிலை என்ன?" என ஐயா மார்ஷல் நேசமணியை நோக்கி கேட்கிறார்..
ஐயா நேசமணி, "நாங்கள் எதுவெல்லாம் எங்களுக்கு வேண்டும் என்கிறோமோ, அது எல்லாம் இங்கிருக்கும் மலையாளிகளுக்கும் பகிரப்படும். எங்கள் தாய்மொழி தமிழ் மொழியாக இருந்த போதும், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, நாங்கள் மலையாளத்தில் படிக்க நிர்பந்திக்கப்பட்டோம். ஆனால், குமரி-தமிழகம் இணைப்புக்கு பின் இங்கிருக்கும் மலையாளிகள் அவர்கள் தாய் மொழிகளில் படிப்பதை உறுதி செய்யும் விதத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்" என்றார். அவ்வளவு நூற்றாண்டு கால துயரத்துக்கு பின்னரும், மொழி சிறுபான்மையினரை நோக்கி யோசித்த உன்னதமான மனது , எங்கள் குமரி தந்தையின் மனது. இன்றளவும், குமரியில் மொழி சிறுபான்மையினருக்காக 'மலையாளம்' தனியாக கற்பிக்கப்படுகிறது.
............
இனி விசயத்துக்கு வருகிறேன்,
குமரி வீரத்தமிழர் முன்னணியை' சேர்ந்த நண்பர்கள் சிலர், சிதைந்த நிலையில் இருக்கும் இரணியல் அரண்மனைக்கும், பாண்டியருக்கும் உள்ள தொடர்பை கண்டறிகிறார்கள். அதற்கான ஆதாரத்தை திரட்டியதும், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோட்டையை விரைவாக செப்பனிட கோரிக்கை வைக்கின்றனர். அவ்வளவு தான், இத்தனை நாள் 'இரணியல் கோட்டைக்கும், மலையாளிகளுக்கும்' முடிச்சுப்போட்டுக் கொண்டிருந்த 'குமரி' மலையாளிகளுக்கு கோபம் வர, அவர்கள் ஆற்றிய எதிர்வினை தான் கீழே உள்ள புகைப்படம்.
'இரணியல் பாண்டியர் கோட்டை' என நம்மவர்கள் முன்வைத்ததை 'இரணியல் "பாண்டி" பேலஸ்' எனவும், 'கண்டன் வீர நாராயண பாண்டிய' அரசன் என நம்மவர்கள் முன்வைத்ததை 'வீர நாராயண பாண்டிய' "கொத்தனார்" என நக்கல் அடித்து அவர்களது 'கன்னியாகுமரி மலையாளிகள்' முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
.............
அன்பு மலையாளிகளே,
ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது, .போரை நிறுத்தக்கோரி கு முத்துக்குமார் என்ற தமிழ் சகோதரன், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு,தன் உடலையே தீக்கு இரையாக்கினான். அந்த கடிதத்தில் வரும் சில வரிகளை கீழே கொடுத்துள்ளோம்.
//
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும்,பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும் //
ஆம், நீங்கள், உங்கள் குழந்தைகள், உங்கள் பெண்கள் என அனைவரும் கேரளத்தில் வாழ்வதை விட குமரியில் அதிக பாதுகாப்புடனே வாழ்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.பாண்டியர் கோட்டை பற்றி உங்களுக்கு முரணான பார்வை இருந்திருந்தால், ஒரு நீண்ட உரையாடலுக்கு நண்பர்கள் தயாராகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் வழக்கம் போல உங்கள் மேட்டிமையை காட்ட "பாண்டி" "கொத்தனார்" என கிண்டலடித்து, வன்மத்தோடு சிரித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
பாண்டியர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
நெடுஞ்சடையன் வேணாட்டை அதகளம் செய்து, நூற்றுகணக்கான யானைகளையும், குதிரைகளையும் பறித்து விழிஞத்தை நொறுக்கி எடுத்த கதை உங்களுக்கு தெரியுமா?
பரந்தக பாண்டியன் படையெடுத்து வந்து துவம்சம் செய்து, பின் அன்றைய அனந்தபுரம்(இன்றைய திருவனந்தபுரம்)தில் இருந்த கோயிலுக்கு தங்க விளக்கு வாங்கிக்கொடுத்த கதை தெரியுமா?
இன்னும் பல வரலாற்று கதைகள் உண்டு. நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளும், பட்டையங்களும் கேரளாவில் பாண்டியர் அடையாளங்களை சொல்கிறது. உங்கள் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திலும் கொஞ்சம் உள்ளது, தேடி வரலாற்றை படியுங்கள்.
இறுதியாக,
நம்பூதிரிகளை, "குனிந்தும், படுத்தும்" கவனித்து, அரசவை மற்றும் அதிகார செல்வாக்கை உருவாக்கி, அந்த பலத்தில் தனக்கு கீழ் இருந்தவனை சவுட்டி 'யாமானே' என கதற வைத்த ஜென்மிகள் காலமில்லை இது. நீண்ட போராட்டங்களுக்கு பின், கடும் உழைப்பாலும், கல்வியாலும் முன்னேறி பொருளாதார தன்னிறைவை எட்டிய தமிழ் சமூகங்கள் தன் முன்னோர் வரலாறை மீள்வாசிப்பு செய்யும் காலம். அந்த சமூகங்கள் வசிக்கும் மண்ணில் இருந்து தான் இப்படி நக்கல் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று உணருங்கள்

கடந்தகால வரலாறுகள் தொடர்பாக உரையாட நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். இதை இப்படி வன்மத்தை தான் தொடர்வீர்கள் என்றால், இப்போது எழுதிக்கொண்டிருப்பது போல எப்போதும் எங்கள் பேனா முனை மட்டும் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்காது.
இப்படிக்கு,
இலட்சக்கணக்கான குமரி தமிழர்களின் ஒருவன்
ஸ்டாலின் பெலிக்ஸ் ம

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155978231352780

.....................
இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் Rev. சாமுவேல் மீட்டீர் எழுதிய The Gospel of south india என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
திருவனந்தபுரம் கோட்டையில் இருந்த 'ஐந்து பாண்டியர்' சிலையில் ஒன்று என அந்த குறிப்பு சொல்கிறது. அப்படியென்றால், அந்த சிலை இப்போது எங்கே உள்ளது?
பாண்டியர் படம் திருவனந்தபுரம் கோட்டையில் இருக்கிறது என்றால், முந்தைய பாண்டியர் செல்வாக்கு எந்த அளவுக்கு இன்றைய கேரளாவில் இருந்தது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டிய ஒன்று..
கண்டன் வீரநாராயண பாண்டிய கோட்டையை புதுப்பிக்க நண்பர்கள் கோரிக்கை வைத்ததும், அதை நக்கல் அடித்து 'இரணியல் பாண்டி அரண்மனை' என ஏழுதும் கன்னியாகுமரி மலையாளிகளுக்கு, திருவனந்தபுரத்தில் இருப்பதும் எங்கள் அடையாளமே என திருப்பி அடித்தால் தான் அடங்குவார்கள் போல..
https://www.facebook.com/shares/view?id=1979806868952694

No comments:

Post a Comment